புதுடெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதானி குற்றமற்றவர் என செபி கூறிய பிறகும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவரை விமர்சித்து வருவதாக பாஜக தலைவர் கவுரவ் வல்லப் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த வல்லப் திடீரென அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி அண்மையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு எதிரான விசாரணையை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) தீவிரமாக மேற்கொண்டது. விசாரணையின் முடிவில் அதானி குற்றமற்றவர் என்று செபி தெரிவித்துவிட்டது. இதையடுத்து, அவரை விமர்சிக்க வேண்டாம் என காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை வலியுறுத்தினேன்.
ஆனால் அதன் பிறகும் அதானி மற்றும் அம்பானியை (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி) தொடர்ந்து விமர்சிக்கும் பழக்கத்தை காங்கிரஸ் கட்சி நிறுத்திக் கொள்ளவில்லை.
உடன்பாடு இல்லை: குறிப்பாக, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அதானி மற்றும் அம்பானி பிரதமர் மோடியிடமிருந்து சலுகைகளை பெறுவதாக கூறிய குற்றச்சாட்டில் எனக்கு சிறிதளவும் உடன்பாடில்லை.
இவ்வாறு வல்லப் தெரிவித்தார்.