Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் வந்தாலே அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு ஆரம்பித்துவிடும். பவுடர் போட்டாலும், இருமுறை குளித்தாலும் அந்த அரிப்பு கட்டுப்படுவதில்லை. கூகுளில் தீர்வு தேடியபோது பேக்கிங் சோடா பயன் தரும் என்ற தகவல் கிடைத்தது. அது உண்மையா…. எப்படிப் பயன்படுத்த வேண்டும்? கோடைக்காலத்தில் ஏற்படும் இந்த அரிப்புக்கு என்னதான் தீர்வு?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்
கோடைக்காலத்தில் பலரும் சந்திக்கிற பிரச்னை இது. கூகுளில் தீர்வு தேடினால், பேக்கிங் சோடா மட்டுமல்ல, தயிர், புரோபயாடிக், க்ரீம் என ஏராளமான தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும். இவையெல்லாம் பலன் தருமா என்று தெரிந்துகொள்வதற்கு முன் அரிப்புக்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
கோடைக்காலத்தில் அந்தரங்க உறுப்புகளில் வியர்வை அதிகமாகத் தங்கும். குறிப்பாக, உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கும், தொடைப்பகுதிகளில் கொழுப்பு அதிகமுள்ளவர்களுக்கும் வியர்வை இன்னும் அதிகமாகத் தங்கும். நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை இன்னும் தீவிரமாக இருக்கும். இவர்களுக்கெல்லாம் அந்தப் பகுதிகளில் டீனியா (Tinea) அல்லது கேண்டிடா (Candida) என்ற பூஞ்சைத் தொற்று ஏற்படும்.
இந்தத் தொற்றின் காரணமாக அந்தப் பகுதிகளில் வீக்கம் ஏற்படும். அதன் விளைவாகவே அங்கே அரிப்பு ஏற்படுகிறது. ஆன்டிஃபங்கல் க்ரீம் (Antifungal Cream) என்று கேட்டு வாங்கி, அரிப்புள்ள இடங்களில் தடவலாம். இந்த க்ரீம்களில் ஸ்டீராய்டு இல்லாததாகப் பார்த்து வாங்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையோடு ஆன்டிஃபங்கல் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.
அந்தரங்கப் பகுதிகளில் வியர்வை தங்காதபடி, வசதியான உள்ளாடைகளை அணிய வேண்டும். இறுக்கமான, சிந்தெடிக் உள்ளாடைகள் வியர்வையை அதிகப்படுத்தும். எனவே, தளர்வான காட்டன் உள்ளாடைகளே சிறந்தவை. முடிந்தவரை காற்றோட்டமான இடங்களில் இருக்க வேண்டியதும் முக்கியம்.
உடல் பருமன் அதிகமிருந்தால், முதலில் அதைக் குறைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதேபோல, ரத்தச் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது முக்கியம். இந்த எளிய வழிகளின் மூலமே அந்தரங்க உறுப்பு அரிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம். ஆன்லைனை பார்த்து கண்ட சிகிச்சைகளையும் பின்பற்றி, தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு, பாதிப்பைத் தீவிரப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.