புனேயில் உள்ள பிரபல கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்து வந்தவர் பாக்யஸ்ரீ (22). லாத்தூரை சேர்ந்த இம்மாணவி புனேயில் தங்கி இருந்து படித்து வந்தார். மாணவியை திடீரென கடந்த 30-ம் தேதி இரவில் இருந்து காணவில்லை. அவரை தொடர்பு கொள்ள அவரது பெற்றோர் முயன்றனர். முடியாத காரணத்தால் அவரது பெற்றோர் புனே வந்து தேட ஆரம்பித்தனர். போலீஸிலும் புகார் செய்திருந்தனர். பாக்யஸ்ரீயின் பெற்றோருக்கு போனில் பணம் கேட்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து ஆரம்பத்தில் ரூ.50 ஆயிரத்தை பாக்யஸ்ரீ பெற்றோர் அனுப்பி வைத்தனர். ஆனால் கடத்தல்காரர்கள் ரூ.9 லட்சம் கேட்டனர். உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. உடனே காணாமல் போன மாணவியை கண்டுபிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்தனர். அவர்கள் காணாமல் போன மாணவியின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதன் அடிப்படையில் மாணவியை கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறுகை, ”மூன்று பேரும் மால் ஒன்றிலிருந்து இரவு மாணவியை காரில் கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் அகமத் நகர் கொண்டு சென்று கழுத்தை நெரித்து மாணவியை கொலை செய்து புதைத்துள்ளனர். அதன் பிறகு மாணவியின் மொபைல் போனை பயன்படுத்தி மாணவியின் தாயாருக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர். கடத்தியவர்களில் இளைஞர் ஒருவர், மாணவி படிக்கும் கல்லூரியில் படித்து வருகிறார்.
அவருக்கு மாணவியை பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் தெரியும். அதோடு அந்த இளைஞர் நிதி நெருக்கடியில் இருந்துள்ளார். எனவே தனது நண்பர்கள் சாகர் மற்றும் சுரேஷ் துணையோடு மாணவியை கடத்தியுள்ளார். மாணவியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.