புதுச்சேரி: வெளிமாநிலத்தில் இருந்து பணம் வந்துள்ளதால் புதுச்சேரி, தமிழகத்தில் அனைத்து பாஜக வேட்பாளர்கள் வீடுகளிலும் சோதனையை தேர்தல் துறை நடத்தவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று (திங்கள்கிழமை) புதுச்சேரியில் பிரச்சாரம் செய்தார். புதுவை உழவர்கரை நகராட்சி எதிரேயுள்ள ஜவகர் நகரில் அவர் கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரத்தை தொடங்கினார்.
பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, “மக்களவைத் தேர்தலானது 2 வேட்பாளர்களுக்கு இடையில் நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.
இது வழக்கமான தேர்தலும் அல்ல. இது தேர்தல் யுத்தம். புதுவைக்கு பிரதமர் மோடி பிரச்சாரத்துக்கு வருவதாக தெரியவில்லை. ஒரு வேளை வந்தால், அவரிடம் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் என்னவானது என புதுவை மக்கள் கேள்வியாக கேட்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது எப்படி மாநில அந்தஸ்து கொடுப்போம் என எதை வைத்துச் சொல்கின்றனர்
புதுவையில் 800 மதுக்கடைகள் இருந்தன. தற்போது கூடுதலாக 250 ரெஸ்டோ பார்கள் திறந்துள்ளனர். இளைஞர்களை சீரழிக்கவே ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சா போதையால் சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுவையின் உள்துறை அமைச்சருக்கும் கஞ்சா வியாபாரிகளுக்கும் என்ன தொடர்பு என அவர்தான் விளக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிசயமான மாநிலம் புதுவை. இங்குதான் ரேஷன் கடைகள் இல்லை. ஆனால் அதிகளவு மதுபானக் கடைகள் உள்ளன. சுதந்திரமாக செயல்பட முடியாத முதல்வர் ரங்கசாமியால் மாநில மக்களுக்கு என்ன செய்ய முடியும்? பதவியை விட சுயமரியாதைதான் முக்கியம் என்பதை அவர் உணர வேண்டும்.
இண்டியா கூட்டணி தவிர்த்து தேர்தலில் 2 கூட்டணி நிற்கிறது. மோடி தலைமையிலான நள்ளிரவு கூட்டணி ஒன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கள்ளக்கூட்டணி மற்றொன்று. மோடியை பற்றி எந்த இடத்திலும் பழனிசாமி விமர்சிப்பதில்லை.
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ரூ. 4 கோடி பணம் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். ஆனால் நயினார் நாகேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் விதி மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பாஜக வேட்பாளர்களுக்கும் பிற மாநிலங்களில் இருந்து பணம் வந்துள்ளது. எனவே பாஜக வேட்பாளர்கள் வீடுகளில் தேர்தல் துறை சோதனையிட வேண்டும்” என்று தெரிவித்தார்.