ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்த்தது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு @ சத்தீஸ்கர்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டம், அமாபால் கிராமத்தில் நேற்று பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பழங்குடி மக்களை காங்கிரஸ்முற்றிலுமாக புறக்கணித்தது. பாஜகவை பொறுத்தவரை பழங்குடி மக்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு நாட்டின் குடியரசுத் தலைவராக பதவி வகிக்கிறார். சத்தீஸ்கரில் பழங்குடியினத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் முதல்வராக பதவி வகிக்கிறார்.

சத்தீஸ்கரில் ஏழை மக்களுக்காக 18 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுக்க மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்ததுமுதல் காங்கிரஸ் கட்சியே ஆட்சி நடத்தி வந்தது. அந்தக் கட்சி ஏழைகளை புறக்கணித்தது. கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போது முதல் வறுமையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சியில் 25 கோடி பேர் வறுமைக் கோட்டில்இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வறுமை முற்றிலுமாக ஒழியும்வரை நான் ஓயமாட்டேன்.

500 ஆண்டு கனவு: கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக அயோத்தியில் ராம் லல்லா கூடாரத்தில் தங்கிருந்தார். பாஜகவின் அதிதீவிர முயற்சியால் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. மக்களின் 500 ஆண்டு கனவு, நனவாகி உள்ளது. ஆனால் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸும் இண்டியா கூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன.

ராமர் கோயில் திறப்பு விழாவை காங்கிரஸ் தலைவர்கள் முழுமையாக புறக்கணித்தனர். திறப்பு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சியில் இருந்துநீக்கப்பட்டனர். வாக்கு வங்கி அரசியலை மையமாகக் கொண்டு காங்கிரஸ் செயல்படுகிறது. அந்தகட்சியின் தேர்தல் அறிக்கை, முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கையாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ஒருவர் கூறும்போது, மக்கள் வளர்ச்சி திட்டத்துக்காக ஒரு ரூபாயை ஒதுக்கினால் 15 பைசா மட்டுமே மக்களை சென்றடைகிறது என்று தெரிவித்தார். இப்போதும் ஊழலின் மறுஉருவமாக காங்கிரஸ் இருக்கிறது.

சத்தீஸ்கரில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ்தலைவர்கள், எனக்கு மிரட்டல்விடுக்கின்றனர். இந்த மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன். ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்தவர்களை கடுமையாக தண்டிப்பேன். ஊழலை ஒழிக்கும்வரை ஓய மாட்டேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.