இந்திய தேசியக்கொடி அவமதிப்பு… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் மந்திரி

மாலே,

இந்திய பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து பிரதமரையும் இந்தியர்களையும் சீண்டியதில் சர்ச்சையில் சிக்கியவர் மாலத்தீவு முன்னாள் மந்திரி மரியம் ஷியுனா. தற்போது இரண்டாவது முறையாக மரியம் ஷியுனா சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

மாலத்தீவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முன்னாள் மந்திரி மரியம், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அவற்றில் ஒன்றாக ‘மிகப்பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கும் எதிர்க்கட்சியிடம் மாலத்தீவு மக்கள் விழ விரும்பவில்லை’ என்ற பதிவில், மரியம் இணைத்திருந்த படம் சர்ச்சையை கிளப்பியது. அந்த பதிவில் இந்திய தேசியக்கொடியில் இடம்பெற்றிருக்கும் அசோக சக்கரத்தை மரியம் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவருக்கு கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், தனது பதிவுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக மரியம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “மாலத்தீவு எதிர்க்கட்சியான எம்டிபி-க்கு நான் அளித்த பதிலில் பயன்படுத்தப்பட்ட படம் இந்தியக் கொடியை ஒத்திருந்தது என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது முற்றிலும் தற்செயலானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.