புதுடெல்லி,
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) தலைவராக முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா இருக்கிறார். அவருக்கும், சங்கத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் ஐ.ஓ.ஏ.யின் தலைமை செயல் அதிகாரியாக ரகுராம் அய்யர் மாதம் ரூ.20 லட்சம் ஊதியத்துக்கு நியமிக்கப்பட்டார். இதே போல் தலைவரின் நிர்வாக உதவியாளராக அஜய் குமார் நரங் கொண்டு வரப்பட்டார். பி.டி. உஷாவின் இவ்விரு நியமனத்தையும் ஏற்காத ஐ.ஓ.ஏ-யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் அவர்கள் இருவரது நியமனத்தை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டனர். பி.டி. உஷா தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஐ.ஓ.ஏ. அலுவலக வளாகத்தில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் உள்ளே வர அனுமதியில்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் 9 நிர்வாக குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இருந்தனர். நீக்கப்பட்ட இருவரையும் குறிப்பிடும் வகையில் தான் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக கருதப்படுகிறது. நீக்கம் தொடர்பான கடிதத்தை உஷாவுக்கு அனுப்பி வைத்தனர்.
பெரும்பாலான நிர்வாக குழு உறுப்பினர்கள் பி.டி.உஷாவுக்கு எதிராக இருப்பது சங்கத்தில் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு பதில் அளித்து பி.டி. உஷா அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நாம் எல்லோரும் இன்னும் ஒற்றுமையாக செயல்படாததை பார்க்க வேதனை அளிக்கிறது. உங்கள் ஒவ்வொருவரின் நடவடிக்கைகள் என்னை ஓரங்கட்ட முயற்சிப்பதை காட்டுகிறது. ஐ.ஓ.ஏ சங்கத்தின் அன்றாட பணிகளை கவனிப்பதற்கு அலுவலர்களை நியமிப்பதும், நீக்குவதும் நிர்வாக கவுன்சிலின் பணி அல்ல. நிர்வாக குழு உறுப்பினர்களாகிய நீங்கள் உங்களது அதிகாரத்தை ஐ.ஓ.ஏ.யின் மேம்பாட்டுக்கு பயன்படுத்துவதே மிகவும் முக்கியமானது.
ஐ.ஓ.ஏ. தலைவரின் உதவியாளர் நியமனம் நிர்வாக கவுன்சிலின் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல. எனவே நீங்கள் (உறுப்பினர்) அவரை நீக்கியது சட்டத்திற்கு புறம்பானது. கேப்டன் அஜய்குமார் நரங்குடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. எந்த காரணமும் இன்றி அவரது சேவையை துண்டித்துள்ளீர்கள்.
விரைவில் ஒலிம்பிக் போட்டி வர உள்ளது. வீரர், வீராங்கனைகளின் நலன் கருதி நாம் கூட்டாக செயல்பட தொடங்கலாம் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். உறுப்பினர்கள் சங்கத்தின் விதிமுறைக்குட்பட்டு செயல்பட வேண்டும். ஒலிம்பிக் சாசனத்தின் விதிமுறைக்கு புறம்பாக செயல்பட்டால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலையிட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தை இடைநீக்கம் செய்யும் சூழல் ஏற்படலாம் என்பதை நினைவூட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.