கொல்கத்தா,
மத்திய கப்பல்துறை இணை மந்திரி சாந்தனு தாக்குர். இவர் மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டம் தாக்குர்நகரை சேர்ந்தவர்.
அங்கு அவருடைய பாட்டி பினாபானி தேவி வசித்து வந்த பூர்வீக வீடு உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடையும் வரை பினாபானி தேவி அந்த வீட்டில்தான் வசித்து வந்தார்.
தற்போது, அவருடைய மருமகளும், மத்திய மந்திரி சாந்தனு தாக்குரின் சித்தியுமான மம்தா பாலா தாக்குர் வசித்து வருகிறார். இவர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஆவார். அந்த வீட்டின் உரிமை தொடர்பாக, சாந்தனு தாக்குருக்கும், மம்தா பாலா தாக்குருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவி வந்தது.
இந்நிலையில், வீட்டை வலுக்கட்டாயமாக அபகரிக்க முயல்வதாக சாந்தனு தாக்குர் மீது மம்தா பாலா தாக்குர் போலீசில் புகார் அளித்தார்.
சாந்தனு தாக்குர் தனது ஆதரவாளர்களுடன் வந்து வீட்டை தனது கட்டுப்பாட்டில் எடுக்க முயன்றார். அப்போது இருவரின் ஆதரவாளர்களும் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, மம்தா பாலா தாக்குர் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், மத்திய மந்திரி சாந்தனு தாக்குர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள சாந்தனு தாக்குர், தான் சட்டப்பூர்வ வாரிசாக இருந்தபோதிலும், மம்தா பாலா தாக்குர் வலுக்கட்டாயமாக வீட்டை ஆக்கிரமித்து இருப்பதாக கூறினார்.