கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் எல்.தங்கவேல் போட்டியிடுகிறார். இந்நில்லையில், கரூர் பசுபதிபாளையம், ராயனூர் உள்ளிட்டப் பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எல்.தங்கவேலுவை ஆதரித்து, அ.தி.மு.க கழகப் பேச்சாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சியும், தி.மு.க-வும் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் எம்.பி-யாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி கரூர் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் எதுவும் பேசவில்லை. தற்பொழுது மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடுவதால், அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், தற்போது பிரசாரத்தின் போது கண்ணீர் வடிக்கிறார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் கரூரில் போட்டியிட்டால் வெற்றிபெற மாட்டோம் என தெரிந்து கோயம்புத்தூரில் போட்டியிடுகிறார். தகர பெட்டியுடன் கோவை சென்றதாக கூறும், அண்ணாமலை, கோவை தொகுதியிலும் வெற்றி பெறப் போவதில்லை. அதனால், மீண்டும் அவர் கர்நாடகாவுக்கே செல்ல இருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்திவிட்டு வெறும் 30 சதவிகித பெண்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாயை வழங்கி ஏமாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு இதுவரை ஏன் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஆனால், மாணவர்களையும், மக்களையும் ஏமாற்றாமல் ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே.
பெண்களுக்கு தாலிக்கு தங்கம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு, ஒரே ஆண்டில் பதினோரு அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் கொண்டு வந்தது உள்ளிட்ட பல சாதனைகளை அ.தி.மு.க அரசு செய்துள்ளது. தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரித்து வருவதால் ஆட்சியில் உள்ள தி.மு.க காவல்துறை செயல்படாத காரணத்தினால் இன்று இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால், எதிர்காலத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்கும். தி.மு.க நிர்வாகிகள் போதைப் பொருளை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்து, அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
தமிழகத்தில் மூன்று மடங்கு வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது… மகளிருக்கான திருமண உதவித்தொகை நிறுத்தப்பட்டது அனைத்தும் தி.மு.க ஆட்சியில் தான். இதுகுறித்து கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி, தி.மு.க அரசிடம் கேள்வி கேட்க முடியுமா?. அ.தி.மு.க உறுப்பினர் இருந்தால்தான் இதுகுறித்து சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் கேள்வி கேட்க முடியும். அண்ணன் தங்கவேல் அத்தனைப் பிரச்னைகளுக்காகவும் கேள்வி எழுப்புவார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடும் ஒரே கட்சி அ.தி.மு.க மட்டும் தான். கரூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளருக்கு நீங்கள் வாக்களித்தால் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY