அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது `இன்ஸ்பெக்டர் ரிஷி.’
ஹாரர் த்ரில்லர் திரைப்படங்களின் தன்மையை பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு முதல் முக்கியமான தேவை, பின்னணி இசைதான். அதனை சரியான பக்குவத்துடன் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ வெப்சீரிஸில் கையாண்டு கவனிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அஸ்வத். இவர் இதற்கு முன்பு ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’, விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்.
சினிமா என்று மட்டும் தனது பாதையைச் சுருக்கிக்கொள்ளாமல் விளம்பரங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமன்றி பகுதி நேரமாக மாணவர்களுக்கு ஆசிரியராகவும் விளங்கி வருகிறார். இவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.
“சின்ன வயசுல இருந்தே எனக்கு மியூசிக் ரொம்பப் பிடிக்கும். அந்தச் சமயத்துல இருந்தே நான் கீபோர்டு வாசிப்பேன். நான் அண்ணா பல்கலைக்கழகத்துல எலெக்ட்ரானிக் மீடியா படிச்சேன். அப்போ ‘சீதா ராமம்’ திரைப்படத்தோட இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் என்னுடைய காலேஜ் சீனியர். அவரும் நானும் ஒண்ணா சேர்ந்து பேன்ட்ல வாசிச்சிருக்கோம். அதுக்குப் பிறகு அவர் முழு நேர இசையமைப்பாளராக வேலை பார்க்கத் தொடங்கிட்டாரு. எனக்கு அந்தச் சமயத்துல இசையமைப்பாளராகுறதுக்கு முழு நம்பிக்கை வரல. சில குழப்பங்கள் இருந்தது. காலேஜ் படிக்கிற சமயத்துலகூட விஜய் ஆண்டனிகிட்ட வேலை பார்க்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. ஆனா, நான் போகல. ஒரு நியூஸ் சேனல்ல செய்தித் தயாரிப்பாளரா வேலைக்குச் சேர்ந்தேன்.
அங்கேயும் செய்திகளுக்கு நானே இசையமைச்சிருக்கேன். அதுக்கப்புறம்தான் சினிமாப் பயணம் தொடங்குச்சு. கல்லூரி சமயத்துல பிலிம் இன்ஸ்டியூட்ல இருந்து ஒரு நட்பு கிடைச்சது. அந்த நண்பர் இயக்குநர் வெங்கட் பிரபுகிட்ட துணை இயக்குநராக வேலை பார்த்தவர். அவர் பண்ணின ‘நளனும் நந்தினியும்’ திரைப்படத்துலதான் இசையமைப்பாளராக முதன் முதல்ல அறிமுகமானேன். அந்தத் திரைப்படம் பெரிய அளவுல வரவேற்பு பெறல. ஆனா, என்னுடைய மியூசிக்கை சிலர் பார்த்துப் பாராட்டினாங்க. முதல் திரைப்படத்திலேயே ஷங்கர் மகாதேவன், ஷ்ரேயா கோஷல், சத்ய பிரகாஷ்னு பெரிய பாடகர்களோட வேலை பார்த்தேன்.
அந்தப் படத்துக்கு வேலை பார்க்கும் போதும் நான் வேலைக்கு லீவு எடுத்துட்டுதான் போனேன். அதுக்கு பிறகுதான் என்னுடைய வேலையை விட்டுட்டேன். அப்புறம் இயக்குநர் கெளதம் மேனன் சாரோட சேர்ந்து சில விளம்பரங்கள்ல வேலை பார்த்தேன். அவர் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படத்துக்கு என்னைப் பின்னணி இசை மட்டும் வாசிக்கச் சொன்னாரு. நான் சில கரெக்சன்ஸ் மட்டும்தான் பண்ணினேன். ஆனா, என் வேலையைப் பார்த்துட்டு என்னுடைய பெயரையும் கிரெடிட்ஸ்ல போட்டாரு. இந்தத் திரைப்படத்துக்குப் பிறகு ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்துக்கு இசையமைச்சேன். ஆனா, எனக்கு முதல் ஹிட் கொடுத்தது ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படம்தான்” என்றவர் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ வெப் சீரிஸ் தொடர்பாகப் பேசத் தொடங்கினார்.
“இப்போ ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ சீரிஸுக்கு மியூசிக் சவுண்ட் ரொம்பவே முக்கியம். அதனால இந்த சீரிஸுக்கு முதல்ல வழக்கமாக என்னென்ன விஷயங்கள் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டோம். வழக்கமான ஹாரர் படங்களுக்குப் பண்ணுற மாதிரியான ஸ்டைல்ல பண்ண வேண்டாம்னு தெளிவாக இருந்தோம். அப்போ சில காட்சிகளுக்கு அமைதிக்கான இடங்களைக் கொடுக்கலாம்னு முடிவெடுத்தோம். இந்தப் படத்துக்காக ஓர் உலகத்தையே உருவாக்கினோம்.
இந்தத் தொடர்ல வர்ற கதாபாத்திரங்களோட ரிங்டோன்கூட நான் இசையமைச்சதுதான். இந்த மாதிரிதான் அந்த உலகத்துக்குள்ள நாங்க வேலை பார்த்தோம்” என்றவர், “இந்த சீரிஸ்ல குறிப்பாக இவங்க இந்தப் பழங்குடியினர்ன்னு காட்சிப்படுத்த வேண்டாம்னு நாங்க நினைச்சோம். பொதுவாக காடு, அதுல பழங்குடியினர் பயன்படுத்துற புல்லாங்குழல் மாதிரியான இசைக் கருவிகளை வச்சுப் பண்ணலாம்னுதான் இந்தப் படத்துல வர்ற ‘காடு’ பாடல் பண்ணினோம்” என்றார்.
சினிமாத் துறையில் பலர் சில முக்கிய காரணங்களுக்காக சில இடைவெளிகளை எடுத்துக்கொள்வார்கள். அதுபோல இசையமைப்பாளர் அஸ்வத்தும் தனது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் குறுகிய இடைவெளிகளை எடுத்திருக்கிறார்.
அது குறித்து அவர், “முதல் திரைப்படத்திலேயே பெரிய பாடகர்களோடு வேலை பார்த்துட்டேன். அடுத்தடுத்து நாம என்ன மாதிரியான திரைப்படங்கள் பண்ணணும்னு எனக்குச் சில யோசனைகள் இருந்தது. அப்போ எனக்குச் சில கற்றல்கள் தேவைப்பட்டுச்சு. அதுனாலதான் அந்த இடைவெளி. எனக்கு ‘உன்னாலே, உன்னாலே’, ‘வணக்கம் சென்னை’ மாதிரியான படங்கள் பண்ணணும்னு ஆசை இருந்தது. ஆனா, அந்த இடைவெளியில சில விளம்பரங்கள்ல வேலை பார்த்தேன்” என்றவர், தனது பாடல்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு தொடர்பாகப் பேசத் தொடங்கினார்.
“பாடல்களோட அங்கீகாரம் கிடைக்கிறதும் கிடைக்காததும் இந்தப் பயணத்தோட ஒரு பகுதிதான். நான் ‘எஃப்.ஐ.ஆர்’ படம் பண்ணினதுக்குப் பிறகு அதே மாதிரியான ஜானர்ல பட வாய்ப்புகள் வந்தன. இப்போ இன்ஸ்பெக்டர் ரிஷிக்கும், ‘எஃப்.ஐ.ஆரு’க்கும் நான் பண்ணின இசைக்குப் பாராட்டுகள் கிடைச்சது. ஆனா, பாடல்களாக பெரிய ஹிட் கிடைக்கலைன்னு வருத்தம் இருக்கு. ‘எஃப்.ஐ.ஆர்’ல சிம்பு சார் பாடின பாடல் இன்னும் நல்ல ஹிட்டாகும்னு நினைச்சேன். அது நடக்கல. இப்போ ஹிட் பாடல்கள் கொடுக்கிறதுக்கான வேலைகளைத்தான் நான் பார்த்துட்டிருக்கேன்.
இதுமட்டுமல்ல, நான் விரிவுரையாளருக்கான தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்றிருக்கேன். பகுதி நேரமாக சில கல்லூரிகளுக்குப் போய் மாணவர்களுக்கு மீடியா தொடர்பாக பல விஷயங்கள் சொல்லித் தர்றேன். மியூசிக் துறை பக்கம் போகலாமா, வேண்டாமான்னு சில குழப்பங்கள் இருந்தன. அந்தச் சமயத்துல இந்தத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றேன். ‘எஃப்.ஐ.ஆர்’ படத்துக்கு இயக்குநர் கெளதம் சார் பாராட்டினாரு. இப்போ ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ வெப் சீரிஸுக்கு விமர்சகர்கள் நல்ல வகையிலான விமர்சனங்கள் தர்றாங்க. அடுத்ததாக சில புராஜெக்ட் வேலைகள் போயிட்டிருக்கு. அதுகுறித்த விரிவான தகவல்களைத் தயாரிப்பாளர்கள் வெளியிடுவாங்க” என முடித்துக்கொண்டார்.