நாட்டைக் கடன் சுமையிலிருந்து விடுவிப்பதற்கு உரிய முறைமை அமைக்கப்படாவிட்டால் நாட்டு மக்கள் நீண்ட காலம் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் மின்சார சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மின்சார சபைக்கு நட்டம் ஏற்படும் போது அந்த நட்டத்தை பொதுமக்கள் சுமக்க வேண்டுமெனவும், தொடர்ந்து நட்டம் ஏற்படுமாயின் அதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இலங்கைக்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து, நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வழங்கியுள்ளன. பழைய கருத்துருக்கள் தவிர்த்து, நாட்டின் கடனில் இருந்து விடுபட மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டிய நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும், அதனை மேற்கொள்ளாவிடின் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதை தவிர்க்க முடியாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.