லக்கிம்பூர் (அசாம்): நரேந்திர மோடி ஆட்சியில் சீனாவால் ஓர் அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அசாமின் லக்கிம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “சீன ஆக்கிரமிப்பின்போது ஜவஹர்லால் நேரு அசாமுக்கு ‘பை-பை’ சொன்னதை அசாம் மக்கள் மறக்க மாட்டார்கள். பிரதமர் மோடியின் ஆட்சியில் சீனாவால் நமது நிலத்தில் ஓர் அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை. அசாமும் அருணாச்சலப் பிரதேசமும் 1962-ஐ மறக்கவே முடியாது.
மத்திய பாஜக தலைமையிலான அரசு, வங்கதேசத்துடனான நாட்டின் எல்லையைப் பாதுகாத்து ஊடுருவலைத் தடுத்து நிறுத்தியுள்ளது. அசாமின் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி கூறினார். அசாமுக்கு அவரது பாட்டி செய்ததை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரால் தவறாக வழிநடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.
மோடியின் 10 ஆண்டுகள் அசாமில் மாற்றத்தின் ஒரு தசாப்தம். கடந்த 10 ஆண்டுகளில், பல்வேறு அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் செய்துள்ளோம். வரும் ஆண்டுகளில் அசாம் வளர்ந்த மாநிலமாக மாறும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
ராமர் கோயில் பிரச்சினையை காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக தொங்கலில் வைத்திருந்தது. பிரதமர் மோடியின் காலத்தில்தான் தீர்ப்பு வந்தது, பூமி பூஜை நடந்தது, கடைசியாக ஜனவரி 22-ம் தேதி பிரான பிரதிஷ்டை நடந்தது” என்று அமித் ஷா பேசினார்.