கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்
“யாராலும் மறுக்க முடியாத உண்மை. பா.ஜ.க இரண்டு வழிகளில் ஒரு கட்சியைச் சிதைக்கப் பார்க்கும். மாநிலத்தில் வலுவாக இருக்கும் கட்சியுடன் கூட்டணிவைத்து உறவாடுவதுபோல, அந்த மாநிலக் கட்சியை முழுவதுமாகவே அழித்துவிடுவது ஒன்று. மற்றொன்று, தேர்தலுக்கு முன்பாக ஒரு கட்சியின் மீது ஆதாரமே இல்லாத அவதூறுகளை அள்ளி வீசுவது. இப்படித்தான், தமிழகத்தில் 2021 தேர்தலையொட்டி மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை, கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வருக்குத் தொடர்பு, கர்நாடகாவில் டி.கே.சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை என்றெல்லாம் அவதூறுகளைப் பரப்பியது பா.ஜ.க. இப்போது மக்களவைத் தேர்தலுக்காக தெலங்கானாவில் கவிதா, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரையும் மதுபானக் கொள்கை வழக்கில், கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டது பா.ஜ.க. இதே ஊழல் வழக்கில், சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம் பா.ஜ.க-வுக்கு 55 கோடி ரூபாயை நிதியாகக் கொடுத்திருக்கிறது. அப்படியென்றால் கைது செய்யப்பட வேண்டியவர் பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாதானே… தோல்வி பயத்தில் இருக்கும் பா.ஜ.க., துளிகூட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் மீது சுமத்தி, அதைத் தேர்தல் வெற்றியாக மாற்ற முயல்கிறது. கடந்த பத்தாண்டுக்காலச் சாதனைகள் என்று சொல்லி வாக்கு கேட்க வக்கில்லாததால்தான், இப்படி இறங்கிவிட்டது பா.ஜ.க.”
ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணித் தலைவர், பா.ஜ.க
“வாய்க்கு வந்ததைச் சொல்லியிருக்கிறார் பிரகாஷ் காரத். பாரதம் முழுவதும் பா.ஜ.க-வுக்குக்கான வெற்றி அலை வீசுகிறது. `இந்தியா’ கூட்டணி துடைத்து எறியப்படும் என்பதும் உறுதியாகிவிட்டது. இந்தத் தோல்வி பயத்தில், `இந்தியா’ கூட்டணியில் இருப்பவர்கள்தான் பொய் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். தமிழகத்திலும் இதே பயம் இருப்பதால்தான், ‘கோவையில் கூட்டணிக் கட்சி தோல்வியைத் தழுவும்’ என்று பயந்து தி.மு.க-வே நேரடியாகக் களமிறங்கியிருக்கிறது. இதே பயத்தில்தான் எதிரும் புதிருமாக இருந்துவரும் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று அனைவரும் ஒரே கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள். யார் எந்தக் கூட்டணி வைத்தாலும் வெற்றிபெறப்போவது பா.ஜ.க கூட்டணி மட்டுமே என்பது உறுதியாகிவிட்டது. 2004-2014 வரை மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், அமலாக்கத்துறை கைப்பற்றிய பணம் 536 கோடி மட்டுமே. அதே 2014-2024 வரை பிரதமர் மோடி அரசில் கைப்பற்றப்பட்ட பணம் 93,000 கோடி ரூபாய். இந்தப் புள்ளிவிவரமே எந்த ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதைக் காட்டும். மேலும், அமலாக்கத்துறையால் இப்போது கைதுசெய்யப்பட்ட யாரும் தவறு செய்யாதவர்கள் கிடையாது. எங்கள் தலைவர் நட்டா சொன்னதுபோல, `இந்தியா’ கூட்டணித் தலைவர்களில் பாதிப் பேர் சிறையில் இருக்கிறார்கள்… மீதிப் பேர் பெயிலில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை!”