துர்க் (சத்தீஸ்கர்),
சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்த விபத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 14-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக 40 பேருடன் சென்ற பஸ் 50 அடி உயரத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்தபோது, தனியார் நிறுவன ஊழியர்களை அவர்களது ஷிப்ட் முடிந்து இரவு 8.30 மணி அளவில் பஸ்சில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்ததாக துர்க் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர சுக்லா தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் குழு, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர்வாசிகளின் குழுக்களுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், பஸ் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் வலைதளத்தில், “சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் பலர் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், “சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் நடந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். மாநில அரசின் மேற்பார்வையில், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
விபத்துக்கு சத்தீஸ்கர் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் இரங்கல் தெரிவித்துள்ளார், மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், பஸ் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு கடவுள் வலிமை அளிக்கவும் பிரார்த்திக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.