RR vs GT Preview In Tamil: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) என்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் (IPL 2024) கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 23 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 4 போட்டிகளை விளையாடிவிட்டன. மே 26ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறும் சூழலில், எந்த அணி பிளே ஆப்பிற்கு செல்லும் என்பது சரியாக கணிப்பது கடினம்.
நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணி (Rajasthan Royals) மட்டும் இன்றும் தோல்வியை சந்திக்காமல் நான்கு போட்டிகளை வென்றுள்ளன. மேலும், அனைத்து அணிகளுமே தலா 1 வெற்றியை பெற்றுவிட்டன. தற்போதைய நிலையில், புள்ளிப்பட்டியலை பார்த்தால் 8வது, 9வது, 10வது இடத்தை மும்பை, ஆர்சிபி, டெல்லி ஆகிய அணிகள் பிடித்திருக்கின்றன. மும்பை அணி இப்போதுதான் தனது காம்பினேஷனை கண்டறிந்துள்ளது. ஆர்சிபி, டெல்லி அணிகளுக்கு இன்னும் சில பிரச்னைகள் இருக்கின்றன. இதில் டெல்லி அணி பலம் வாய்ந்த சிஎஸ்கேவை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே (Chennai Super Kings) 6 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் முதலிடத்தில் 8 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் 6 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் 3வது, 4வது இடத்தில் உள்ளன. சன்ரைசர்ஸ் அணி நேற்றிரவு நடந்த போட்டியில் பஞ்சாப் அணியை 2 ரன்களில் வித்தியாசத்தில் வீழ்த்தி 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் முறையே 6வது, 7வது உள்ளன.
RR vs GT: பலமிக்க அணிகளின் பலப்பரீட்சை
இந்நிலையில், முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும், 7வது இடத்தில் இருக்கும் குஜராத் (Gujarat Titans) அணியும் இன்று ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகின்றன. குஜராத் அணி 2022ஆம் ஆண்டில் இருந்து அறிமுகமானதில் இருந்து தற்போது வரை பலமிக்க அணியாகவே திகழ்கிறது. ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கு மாறிய பிறகும், ஷமி காயம் காரணமாக விலகிய பிறகும் கூட அந்த அணி பலமானதாகவே உள்ளது.
இருப்பினும் சில பிரச்னைகள் காரணமாக அந்த அணி சற்று திணறி வருகிறது. மறுபுறம் ராஜஸ்தான் முழுமையாக ஒரு அணியாக செயல்படுகிறது என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் அந்த அணி தோல்வியடையாத அணியாக வலம் வருகிறது. இந்நிலையில், இன்றைய போட்டி குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
குஜராத் அணியின் பிரச்னைகள்
முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணியை குறித்து பார்ப்போம். 2022இல் அறிமுகமாகி சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத், 2023இல் இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது. இந்தாண்டு கேப்டன் பொறுப்பு சுப்மான் கில்லுக்கு மாறியது. முதல் போட்டியிலேயே மும்பை அணியை குஜராத் வீழ்த்தியிருந்தாலும், இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே அணியுடன் தோல்வியுற்றது.
தொடர்ந்து சொந்த மண்ணில் பலமான ஹைதரபாத்தை வென்ற குஜராத், அடுத்த போட்டியிலேயே பஞ்சாப் அணியிடம் சொந்த மண்ணிலேயே தோற்றது. இதையடுத்து லக்னோவுக்கு எதிரான போட்டியிலும் குஜராத் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. குஜராத் அணிக்கு பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிற்சில பிரச்னைகள் இருக்கின்றன. சாஹா இருந்தவரை ஓப்பனிங்கில் ஓட்டை இருந்தது. இப்போது சுப்மான் கில் – சாய் சுதர்சன் அந்த ஓட்டையை அடைத்துவிட்டனர் என கூறலாம்.
இந்த தமிழக வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
ஆனால், டேவிட் மில்லரின் காயம் அவர்களை மேலும் பிரச்னைக்குள்ளாக்கி உள்ளது. டாப் ஆர்டரில் கேன் வில்லியம்சனுக்கு இடம் கிடைத்தாலும் டேவிட் மில்லர் போல் மிடில் ஆர்டருக்கு பலம் சேர்ப்பாரா என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். இருப்பினும் வில்லியம்சனை குறைத்தும் மதிப்பிட முடியாது. விஜய் சங்கருக்கு (Vijay Shankar) பதில் அபினவ் மனோகர் (Abinav Manohar) அல்லது ஷாருக்கான் (Shah Rukh Khan) ஆகியோரில் ஒருவரை முயற்சித்து பார்க்கலாம்.
View this post on Instagram
விஜய் சங்கருக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது என்றே கூறலாம். குறிப்பாக, கடந்த போட்டியில் விஜய் சங்கர் நிலைத்து நின்று ஆட நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதனை அவர் தவறவிட்டுவிட்டார். என பேட்டிங்கில் சிறு மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக, ஷாருக்கானை சேர்த்தால் அஸ்வின், சஹால் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களையும், டெத் ஓவர்களில் வேகப்பந்துவீச்சை அசால்ட்டாக சமாளிப்பார் என்பதில் ஐயமில்லை.
பந்துவீச்சு சிறப்பாகவே உள்ளது…
பந்துவீச்சில் கடந்த முறை ஸ்பென்ஸர் ஜான்சன், மோகித் சர்மா, உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே உள்ளிட்டோர் சிறப்பாகவே பந்துவீசினர். இருப்பினும், ஜெய்ப்பூர் ஆடுகளத்தை மனதில் வைத்து ஒரு ஸ்பின்னருக்கும் வாய்ப்பளிக்கலாம். சூழலை பொறுத்து அவர்கள் ஜெயந்த் யாதவ், சாய் கிஷோர் உள்ளிட்டோரை பயன்படுத்தலாம். பவர்பிளேவில் உமேஷ் கடந்த போட்டியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். டெத் ஓவர்களில் மோகித் சர்மாவையே அவர்கள் பயன்படுத்தலாம். மிடில் ஓவர்களில் தர்ஷனுக்கு வாய்ப்பளிக்கலாம். இவற்றை சரிசெய்து ஒரு அணியாக விளையாடும்பட்சத்தில் நிச்சயம் குஜராத் அதன் 3வது வெற்றியை பதிவு செய்யும்.
டேபிள் டாப்பர் ராஜஸ்தான்
பலம் மிகுந்த ராஜஸ்தான் குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் இன்னும் அந்த அணியின் அனைத்து வீரர்கள் தங்களின் முழு திறனை வெளிப்படுத்தவில்லை என்றே கூறலாம். ஜெய்ஸ்வால் இன்னும் ஃபார்முக்கு வரவில்லை. பட்லரின் சதம் நிச்சயம் ஜெய்ஸ்வாலுக்கும் நம்பிக்கை அளித்திருக்கும். சஞ்சு சாம்சன் (Sanju Samson), ரியான் பராக் ஆகியோர் முரட்டு பார்ம்தான் ராஜஸ்தானின் வெற்றிக்கு முழுமையான காரணம்.
இன்னும் ஹெட்மயர், துருவ் ஜூரேல், சுபம் தூபே போன்றோருக்கு தக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. குஜராத் பந்துவீச்சாளர்கள் விரைவாக டாப் ஆர்டரையும், அவர்களுக்கு ஆபத்தாந்தவனாக வரும் அஸ்வினையும் அவுட்டாக்கிவிட்டால் ரன்வேகத்தை கட்டுப்படுத்தலாம். பந்துவீச்சில் சஹால், அஸ்வின், பர்கர், போல்ட், ஆவேஷ் கான் ஆகியோர் குஜராத்துக்கு நிச்சயம் தலைவலியை கொடுப்பார்கள், சந்தீப் சர்மாவின் உடற்தகுதி குறித்து எந்த தகவலும் வரவில்லை.
முதலில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்யும் எனலாம். இதுவரை ராஜஸ்தான் இந்த மைதானத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் மூன்று வெவ்வேறு பிட்ச்களில் விளையாடியுள்ளதாக அஸ்வின் சமீபத்தில் கூறியிருந்தார். எனவே, இம்முறையும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு பெரிதும் உதவலாம். முதலில் டாஸ் வெல்லும் அணி 200+ குவித்தாலே வெற்றி பெற இயலும். இதுவரை ராஜஸ்தான் – குஜராத் அணி 5 போட்டிகளில் விளையாடி குஜராத் அணி 4 போட்டிகளிலும், ராஜஸ்தான் 1 போட்டியிலும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.