கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வன்முறை அதிகம்நடைபெறுவதால், அங்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 25,000-க்கும் மேற்பட்ட மத்திய படையினரை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது.
மே. வங்கத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஏற்கெனவே 177 கம்பெனி மத்திய படைகள் அனுப்பப்பட்டிருந்தன. இவற்றில் 33 கம்பெனி மத்திய ஆயுதப் படை போலீஸார் (சிஆர்பிஎப்), 17 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்), 10 கம்பெனி இந்தோ திபெத் எல்லை போலீஸார், 15 கம்பெனி சசாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி), 5 கம்பெனி ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்பிஎப்) உள்ளனர். ஒவ்வொரு கம்பெனியிலும் 100 வீரர்கள் இடம் பெற்று இருப்பர்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் மெதினிப்பூர் மாவட்டத்தின் பர்பாபகுதியில், கடந்த 2022-ம் ஆண்டுகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகவிசாரிக்க சென்ற என்ஐஏ குழுவினரை ஒரு கும்பல் தாக்கியது. கடந்த ஜனவரியில் சந்தேஷ்காலியில் சோதனைக்கு சென்ற அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கூடுதலாக 100 கம்பெனி மத்திய படைகளை அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில், தேர்தலுக்குப் பின்பும் வன்முறை நடந்ததால், தேர்தலுக்குப் பின் 3 மாத காலத்துக்கு மத்திய படைகளை பணியமர்த்த வேண்டும் என ஆளுநர் சி.வி ஆனந்த போஸிடம் மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித் துறை தலைவர்களை மாற்றக்கோரி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம்முன்பு திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் டெரிக் ஓ பிரையன், சகாரிகா கோஷ்,டோலா சென் ஆகியோர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால்தேர்தல் நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய படைகளை ஆளும் பாஜக பயன்படுத்துவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கோடீஸ்வர வேட்பாளர்கள்: மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி, கூச் பெஹார் மற்றும் அலிபுர்துவார் மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு போட்டியிடும் 37 வேட்பாளர்களில், 10 பேர் கோடீஸ்வரர்கள் என அவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவை ஆராய்ந்ததில் தெரியவந்துள்ளது. இவர்களில் ஜல்பைகுரி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் தேப்ராஜ் பர்மனுக்கு ரூ.3.89 கோடி சொத்துகள் உள்ளன. அலிபுர்துவார் தனித் தொகுதியில் போட்டியிடும் எஸ்யுசிஐ அமைப்பின் சந்தன் ஓரானின் சொத்து மதிப்பு மிகக் குறைந்த அளவாக ரூ.12,117 என தெரிவிக்கப்பட்டுள்ளது.