புதுடெல்லி: தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய இஸ்ரேலியர் தங்களுக்கு ஆதரவு அளித்து வரும் இந்திய மக்களுக்கும், ஊடகத்துக்கும் முக்கியமாக பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி காசாவில் இருந்து போர் தொடுத்தது. இதில் 1,100க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13, 000 குழந்தைகள் உட்பட 33,000 பாலஸ்தீனர்கள் பலியாகினர். இதனிடையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய மோரன் என்பவர், சவாலான காலகட்டத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நின்றதாகக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து மோரன் கூறியதாவது: அக்டோபர் 7க்கு முன்னதாகவும் சரி பின்னரும் சரி இந்தியா எங்களுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வந்திருக்கிறது. அதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக்க நன்றி. இஸ்ரேலின் உண்மையான நண்பன் இந்தியா என்பதை அறிவோம். இந்திய அரசு மட்டுமல்ல இந்திய மக்களும் எங்களின் உற்ற நண்பனாக எப்போதும் இருந்துள்ளனர். இனியும் அவ்வாறே தொடர்வார்கள். எங்கள் குரல் எல்லா இடங்களிலும் ஒலிக்க முடியாது போனாலும் இந்திய மக்கள் எங்களுக்காகத் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
முன்னனதாக இது குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் கடந்த ஜனவரி 30-ம் தேதி கூறுகையில்:
பயங்கரவாதத்தை இந்தியா முதல் ஆளாக எதிர்த்து வந்துள்ளது. எங்கள் மீது கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியபோது அன்று மதியமே கடும் கண்டனம் தெரிவித்தார் பிரதமர் மோடி. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் எங்களுக்கு இந்திய மக்கள் அளப்பரிய ஆதரவு அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.