RR vs GT: கடைசி ஓவர் பரபரப்பு! திரில் வெற்றி பெற்ற குஜராத் அணி!

Rajasthan Royals vs Gujarat Titans: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் விளையாடியது.  ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பில்டிங் தேர்வு செய்தது.  சிறிது மழை பெய்ததால் போட்டி சற்று தாமதமாக துவங்கியது. இருப்பினும் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. ராஜஸ்தான் ராயல் அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் நான்கிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டியில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி மற்றும் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்தது.  இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி களம் இறங்கியது. 

ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பெட்லர் இந்த சீசனில் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வந்தனர்.  அதேபோல பவர் பிளே முடிவதற்குள் இரண்டு ஓபனிங் பேட்ஸ்மேன்களையும் இழந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஜெய்ஸ்வால் 24 ரன்களுக்கும், பட்லர் 8 ரன்களுக்கும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.  அதன் பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டது.  இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் போட்டியை குஜராத் அணியிடமிருந்து ராஜஸ்தான் பக்கம் திருப்பினர்.  ரியான் பராக் 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 48 பந்தில் 76 ரன்கள் அடித்தார்.  மறுபுறம் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 68 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணி 20 முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.  

பெரிய இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஓப்பனிங் சிறப்பாக அமைந்தது.  சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் நல்ல ஒரு தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 64 ரன்கள் சேர்த்தது. சாய் சுதர்சன் 35 ரன்களுக்கும், சுப்மன் கில் 72 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.  அதன் பிறகு களமிறங்கிய மேத்யூ வேட், அபினவ் மனோகர், விஜய் சங்கர் ரன்கள் அடிக்க தவறினர். இதனால் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி கட்டத்தில் ராகுல் தெவாடியா, சாருக் கான் மற்றும் ரஷீத் கான் இந்த போட்டியின் முடிவை மாற்றினர்.  

கடைசி ஐந்து ஓவர்களில் சிறப்பாக விளையாடிய போட்டியை தங்கள் பக்கம் திருப்பினர் குஜராத் அணியினர். கடைசி ஓவரில் வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஷீத் கான் மற்றும் ராகுல் தெவாடியா சிறப்பாக விளையாடி வெற்றி பெற செய்துள்ளனர். கடைசி பந்தில் வெற்றி பெற இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஷீத் கான் பவுண்டரி அடித்து வெற்றி பெற செய்தார். இதன் மூலம் குஜராத் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.