பயணியின் ஆடை மீது விமர்சனம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெங்களூரு மெட்ரோ நிர்வாகம்

பெங்களூரு: சட்டையின் மேல் பட்டனை அணியாமல் வந்த நபரை ரயில் ஏறவிடாமல் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிட் (பிஎம்ஆர்சிஎல்) தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூருவின் தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) வந்த இளைஞர் ஒருவரை மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர், அவரது சட்டை மேல் பட்டன்களை மாட்டச் சொல்லியும், மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் சுத்தமான ஆடைகளுடன் வரவேண்டும் என்றும், அழுக்கான ஆடையணிந்து வந்தால் ரயில் நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். பயணி ஒருவர் எடுத்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தை படம் பிடித்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்ட பயணி, “மீண்டும் ஆடை சர்ச்சை பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. தொழிலாளி ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டு அவரின் சட்டை பட்டன்களை மாட்டுமாறு அறிவுறுத்தப்பட்டார். ‘நம்ம மெட்ரோ’ எப்போது இவ்வாறு எல்லாம் மாறியது?” என்று வினவியுள்ளார். மேலும் தனது பதிவில் பெங்களூரு மெட்ரோ நிர்வாகத்தினரையும், தெற்கு பெங்களூரு எம்.பி தேஜஸ்வி சூர்யாவையும் டேக் செய்துள்ளார்.

இதனிடையே அனைத்து பயணிகளும் சமமாகவே நடத்தப்படுகின்றனர் என்று பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “பயணிகளுக்கிடையே ஆண்கள் – பெண்கள், ஏழை – பணக்காரர் என்ற பாகுபாடு காட்டப்படுவதில்லை. அந்தப் பயணி போதையில் இருந்ததாக அலுவலர்கள் சந்தேகித்தனர். அவர் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்று தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார். விசாராணைக்குப் பின்னர் அவர் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்” என்று தெரிவித்தனர்.

முன்னதாக, விவசாயி ஒருவரை ரயில் ஏறவிடமால் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, பிஎம்ஆர்சிஎல்-ன் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த விவசாயி அழுக்கு ஆடைகளுடன் தலையில் பை ஒன்றை சுமந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.