ரோடு ஷோ, பாஜக ‘பேட்டி’ தலைவர்… – மோடி, அண்ணாமலை பெயரைக் குறிப்பிடாமல் இபிஎஸ் சாடல்

பொள்ளாச்சி: “இப்போது மத்தியில் இருந்து தமிழகத்துக்கு அடிக்கடி வந்து போகின்றனர். விமானத்தில் இருந்து இறங்குகின்றனர். ரோட்டில் செல்கின்றனர். அத்துடன் கதை முடிந்து போய்விட்டது. மக்கள் வாக்களித்து விடுவார்களா? தமிழக மக்கள் என்ன சாதாரணமானவர்களா? அறிவுத் திறன் படைத்தவர்கள்” என்று பொள்ளாச்சியில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எனினும், அவர் தனது பேச்சில் பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடவில்லை.

மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இது தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக இல்லாமல், வெற்றி விழா கூட்டம் போல் மக்கள் வெள்ளம் காட்சியளிக்கிறது. இங்கு கூடியிருக்கும் மக்களின் எழுச்சியில் இருந்து அதிமுக வேட்பாளரின் வெற்றியைப் பார்க்க முடிகிறது. அதிமுக ஒரு வலிமையான இயக்கம்.

முதல்வர் ஸ்டாலின், அதிமுக இரண்டு, மூன்றாக போய்விட்டது என்று பேசுகிறார். பொள்ளாச்சியில் வந்து பாருங்கள் முதல்வரே, அதிமுகவின் கூட்டம் எப்படி இருக்கிறது என்று. அதிமுக ஒன்றாக இருக்கிறது என்பதற்கு இங்கு குழுமியிருக்கும் மக்கள் வெள்ளமே சாட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவை உடைக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்தார். அவரது முயற்சிகள் தவிடுபொடியானது. அதிமுகவை உடைக்க முதல்வர் எடுத்த அத்தனை அவதாரங்களும் தூள் தூளாக்கப்பட்டது.

அதிமுகவை உருவாக்கியவர் தெய்வசக்தி படைத்த எம்ஜிஆர். அதைக் கட்டிக் காத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இந்தப் இருபெரும் தலைவர்களும், தமிழக மக்களுக்கு கொடுத்த மிகப் பெரும் கொடை. நம்முடைய தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள். சில தலைவர்கள் அவர்களுடைய குடும்பத்தினருக்காக வாழ்ந்தார்கள். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை உருவாக்கி, காட்டிக் காத்து நம்மிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளனர். நாம் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் தேர்தல் என்ற பெயரில் எதிரிகளை ஓடஓட விரட்டி வெற்றிக்கொடி நாட்டுவோம்.

அதிமுக தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி. இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக வருவதற்கு அதிமுக அரசு பாடுபட்டது. அதிமுகவின் 30 ஆண்டு கால உழைப்பால், தமிழகம் அகில இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது.

புதிதாக ஒரு தலைவர் பாஜகவில் வந்திருக்கிறார். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பேட்டிக் கொடுப்பார். விமானத்தில் இருந்து இறங்கிய பிறகு பேட்டிக்க கொடுப்பார். பேட்டிக் கொடுப்பதுதான் அவருடைய வேலை. பேட்டிக் கொடுத்தே தலைவர் பதவியில் இருக்கப் பார்க்கிறார். பொதுவாக கட்சித் தலைவர்கள் பல வழிகளில் மக்களைச் சந்திப்பார்கள். ஆனால், பாஜக தலைவர், அவ்வப்போது பேட்டிக் கொடுத்து மக்களை நம்ப வைத்து, வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார்.

அது ஒன்றும் தமிழக மக்களிடத்தில் எடுபடாது. தமிழகத்தில் உழைப்பவர்களுக்குத்தான் மரியாதை. உழைக்கும் கட்சி அதிமுக. மக்களுக்கு நன்மை செய்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். எனவே, அவர் எவ்வளவு பேட்டிகள் கொடுத்தாலும், ஒன்றும் எடுபடப் போவது இல்லை. ஏன் நான் நினைத்தால், பேட்டிக் கொடுக்க முடியாதா? பேட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். அதனால், நாட்டு மக்களுக்கு என்ன பயன்? எப்போது எதைச் சொல்ல வேண்டுமோ, அப்போது அதைச் சொன்னால், அது மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆனால், அவர் எல்லாவற்றுக்கும் பேட்டி கொடுக்கிறார்.

நாட்டில் எத்தனையோ தலைவர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், மறைந்து போகிறார்கள். ஆனால், மக்கள் மனதிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிமுகவின் தலைவர்கள். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இன்றளவும் மக்கள் மனதில் வாழ காரணம், அவர்கள் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்தனர். எனவே, அந்த தலைவரைப் போல எத்தனை தலைவர்கள் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.

இப்போது மத்தியில் இருந்து தமிழகத்துக்கு அடிக்கடி வந்து போகின்றனர். அதனால், என்ன பிரயோஜனம்? மத்தியில் இருந்து இங்கு வருபவர்கள், ஏதாவது திட்டத்தைக் கொண்டுவந்து, அதன்மூலம் மக்கள் பயன் அடைந்திருந்தால், அது பிரயோஜனமாக இருக்கும். ஆனால், அதைவிட்டுவிட்டு, விமானத்தில் இருந்து இறங்குகின்றனர். ரோட்டில் செல்கின்றனர். அத்துடன் கதை முடிந்து போய்விட்டது. மக்கள் வாக்களித்து விடுவார்களா? தமிழக மக்கள் என்ன சாதரணமானவர்களா? அறிவுத்திறன் படைத்தவர்கள்.

சரி, தவறு எது என்று எடைபோட்டு பார்த்து தீர்ப்பளிக்கக் கூடியவர்கள் தமிழக மக்கள். எனவே, இந்த ஏமாற்று வேலை எல்லாம் தமிழகத்தில் எடுபடாது. நாங்கள் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்து, சிறப்பான ஆட்சி நடத்தி பல்வேறு திட்டங்களைக் கொண்டு நிறைவேற்றி, மக்கள் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுள்ளனர். இந்தச் சூழலில், யார் யாரோ வந்து, ஏதேதோ பேசி, மக்களை குழப்பி அந்த குழப்பத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அதெல்லாம் ஒருபோதும் தமிழகத்தில் நடக்காது” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.