ஐபிஎல் 2024 தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்றது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து இருந்தனர். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பல இளம் வீரர்களும் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து இருந்தனர். இதில் பலர் ஏலத்தில் நல்ல விலைக்கு எடுக்கப்பட்டனர். சில வீரர்களை எந்த அணிகளும் வாங்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் கூட ஏலத்தில் எடுக்கப்படாமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதே சமயம் பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் போன்ற வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஏலத்தில் கம்மி விலையில் எடுக்கப்பட்ட சில வீரர்கள் ஐபிஎல் 2024ல் விளையாடாமல் புறக்கணித்து உள்ளனர். அடிப்படை விலை அல்லது மிகவும் கம்மியான விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்டதால் ஐபிஎல்லை புறக்கணித்து உள்ளனர் என்று கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் வீரர்கள் தங்கள் பெயர்களை திரும்பப் பெறுவது சில உரிமையாளர்களை கவலையடைய செய்துள்ளது. ஏலத்தில் அவர்களை நம்பி எடுத்து, கடைசியில் அவர்கள் விளையாடாமல் போவது அணியின் ஒட்டுமொத்த திட்டமிடலை பாதிக்கிறது என்று கூறியுள்ளனர். சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி இருந்தாலும், குறைவான தொகைக்கு ஏலம் போனதால் ஐபிஎல்லை புறக்கணித்த வீரர்களை பற்றி பார்ப்போம்.
ஆடம் ஜம்பா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஆடம் ஜம்பாவை ரூ. 1.5 கோடி ரூபாய்க்கு எடுத்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் 2023 சீசனில் அவர் விளையாடினார். ஆனால் இந்த ஆண்டு சில தனிப்பட்ட காரணங்களால் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஐபிஎல் 2024ல் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்துள்ளார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
வனிந்து ஹசரங்கா: ஐபிஎல் 2024ல் இருந்து இலங்கை அணியின் டி20ஐ கேப்டன் வனிந்து ஹசரங்கா கடைசி நேரத்தில் விலகினார். சன்ரைசஸ் ஹைதராபாத் அணி அவரை ரூ. 1.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் ஹசரங்காவுக்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர் காயம் ஏற்பட்டது. மேலும் இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் விளையாட ஐபிஎல்லை புறக்கணித்துள்ளார்.
ஜேசன் ராய்: இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் கடைசி நேரத்தில் ஐபிஎல்லில் இருந்து விலகுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஜேசன் ராய் கடந்த சீசனில் கொல்கத்தா அணியில் விளையாடினார். ஆனால் இந்த ஆண்டு அணியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக கொல்கத்தா அணியில் பில் சால்ட் விளையாடி வருகிறார்.
கஸ் அட்கின்சன்: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பணிச்சுமை மேலாண்மைக்காக சில வீரர்களை ஐபிஎல் விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால் கஸ் அட்கின்சன் ஐபிஎல்லில் ரூ. 1 கோடிக்கு ஏலம் போனதால் இந்த ஆண்டு அவர் விளையாடவில்லை. அதே சமயம் 18.5 கோடி எடுக்கப்பட்ட சாம் குர்ரன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.