புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல்வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதிடெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கேஜ்ரிவால் மனுவை நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பான தீர்ப்பில், “டெல்லி மதுபான கொள்கை ஊழல்வழக்கில் சட்டப்பூர்வ நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டு உள்ளன. அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன. கேஜ்ரிவாலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என்றும் வரும் 15-ம் தேதிக்கு முன்னதாக விசாரிக்க வாய்ப்பில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் தனது வழக்கறிஞர்களை வாரத்துக்கு 2 முறைக்கு பதில் 5 முறை சந்திக்க அனுமதிக்கவேண்டும் என ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் தரப்பில்ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும் நீதிமன்றம் நேற்று காலையில் நிராகரித்துவிட்டது. அர்விந்த் கேஜ்ரிவாலின் 3 மனுக்கள் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்டது. இது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கேஜ்ரிவால் மனைவி சுனிதா,டெல்லி அமைச்சர் கோபால் ராய், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், சந்தீப் பதக், சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, நேற்று முன்தினம் கேஜ்ரிவாலை சந்தித்தபோது அவர் வழங்கிய ஒருஅறிக்கையை கட்சித் தலைவர் களிடம் சுனிதா வழங்கினார்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு கோபால் ராய் கூறியதாவது:
சிறையில் உள்ள கேஜ்ரிவால் எங்களுக்கு 2 தகவல்களை அனுப்பி உள்ளார். முதலாவதாக, டெல்லி மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, ஆம் ஆத்மி கட்சியும் அரசும் தொடர்ந்து தங்கள் சேவைகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இரண்டாவதாக சர்வாதிகார அரசின் அனைத்துவிதமான தடைகள் மற்றும்அடக்குமுறைகளை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டியதுமிகவும் முக்கியம் என்றும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.