சென்னை: சென்னை, மதுரை, கோவைக்கு கூடுதல்துணை ராணுவப் படையினர் நியமிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பற்றாக்குறை காரணமாக தேர்தல் பணிக்காகவெளிமாநிலத்தில் இருந்து ஊர்க்காவல்படையினர் வரவழைக்கப்படுகின்றனர்.
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளிலும் உள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான மின்னணு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு, அதில் வேட்பாளர்கள், சின்னம் ஒட்டும்பணி நடந்து வருகிறது. இதுதவிர தேர்தல் பணியாளர்கள், காவல் துறையினர், துணை ராணுவப் படையினருக்கு பயிற்சிஅளிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளனர்.
தமிழகத்துக்கு தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்து, பல்வேறு மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் இவர்கள்அதிக அளவில் பணியமர்த்தப்படுகின்றனர். அந்த வகையில், சென்னை, மதுரை,கோவை மாவட்டத்துக்கு தலா 7 கம்பெனிகளும், அடுத்ததாக தேனி, தூத்துக்குடி,கன்னியாகுமரி, தஞ்சாவூருக்கு தலா 6 கம்பெனிகளும், திருநெல்வேலி, விருதுநகர், திருப்பூர், சேலம் மாவட்டங்களுக்கு தலா 5 கம்பெனிகளும் பிரித்து அனுப்பப்பட உள்ளன.
இவர்கள் தவிர, தமிழக காவல் துறையின் அனைத்து படை பிரிவினர், ஊர்க்காவல்படையினர், முன்னாள் ராணுவத்தினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் ஊர்க்காவல்படையினர் போதிய அளவில் தமிழகத்தில் இல்லாத நிலையில், காவல்துறைமூலம், அண்டை மாநிலத்தில் இருந்துஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட உள்ளதாகவும், அருகில் உள்ளமாநிலங்களுக்கு தேவைப்படும் படையினர் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுவார்கள் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.