வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றபோது, ஆங்கிலேயர்களுடன் கூட்டு வைத்தது யார்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு பக்கமும் நாட்டை துண்டாட முயற்சிப்பது போல் உள்ளது. சுதந்திர இயக்கத்தின்போது இருந்த முஸ்லிம் லீக் சிந்தனையை பிரதிபலிப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது’ என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இதற்கு எக்ஸ் தளத்தில் பதில் அளித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: இந்த தேர்தல் இரண்டு கொள்கைகளுக்கு இடையிலான போராட்டம். ஒரு பக்கம் ஒன்றிணைந்த இந்தியாவுக்கான காங்கிரஸ் இருக்கிறது. மறுபக்கம் மக்களை எப்போதும் பிளவுபடுத்த விரும்புவர்கள் உள்ளனர்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்தது யார்? இந்திய சிறைகளில் எல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் அடைக்கப்பட்டபோது, நாட்டை பிரித்த சக்திகளுடன் இணைந்து மாநிலங்களில் ஆட்சி செய்தவர்கள் யார்? அரசியல் களத்தில் பொய்களை பரப்பினாலும், வரலாறு மாறாது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, முஸ்லீம் லீக் சிந்தனையுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி கருத்து தெரிவித்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கடந்த திங்கள் கிழமை புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.