பெய்ஜிங்: இந்தியா, சீனா இடையே வலுவான உறவு நீடிப்பது இரு நாடுகளுக்கும் நல்லது என்று சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ‘நியூஸ்வீக்’ வாராந்திர இதழுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இந்திய, சீன எல்லைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் இரு நாடுகளிடையே நிலவும் அசாதாரண சூழ்நிலையை மாற்ற முடியும்.
இரு நாடுகள் இடையே சுமுக உறவு நீடிப்பது இந்த பிராந்தியத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் நல்லது. ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியை மீட்டெடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் பேட்டி குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மா நிங் நேற்று பெய்ஜிங்கில் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அவர்கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துகளை சீன அரசு முக்கியமானதாக கருதுகிறது. இந்தியா, சீனா இடையே வலுவான, ஸ்திரமான உறவு நீடிப்பது இரு நாடுகளுக்கும் நல்லது. அதோடு மட்டுமன்றி இரு நாடுகள் இடையே நல்லுறவு நீடித்தால் இந்த பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சி ஊக்கம் பெறும்.
இரு நாடுகள் இடையே தற்போது ராணுவ ரீதியாகவும் தூதரகரீதியாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பரஸ்பரம் நம்பிக்கை, ஒத்துழைப்பு மூலம் கருத்து வேறுபாடுகளை களைய முடியும்.இவ்வாறு மா நிங் தெரிவித்தார்.
கடந்த 2020-ம் ஆண்டில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இரு நாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது.