MI vs CSK Pitch Report: ஐபிஎல் தொடரின் (Indian Premier League) முக்கியமான போட்டி என்னவென்று கேட்டால், சிறுகுழந்தையும் தூக்கத்தில் இருந்து எழுந்து சொல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிதான் என்று. இரு அணிகளும் இந்த 16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி உள்ளனர். இரு அணிகளும் தலா 5 முறை கோப்பைகளை பெற்றுள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தையும் வீரர்களையும் கொண்டவை இந்த இரு அணிகள்.
அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் (MI vs CSK) மும்பை வான்கடே மைதானத்தில் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரிலும் (IPL 2024) இரு அணிகளுக்கும் இது முக்கியமான லீக் போட்டியாக பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில், சென்னை 3 போட்டிகளிலும், மும்பை 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் நிச்சயம் வெற்றியை உறுதி செய்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருப்பார்கள்.
கடப்பாரை மும்பை இந்தியன்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) இதுவரை விளையாடி 5 போட்டிகளில் தனது ஹோம் மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 3 போட்டிகளில்தான் வென்றுள்ளன. சென்னைக்கு வெளியே நடந்த 2 போட்டிகளிலும் டெல்லி, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக படுதோல்வியையே அந்த அணி சந்தித்தது. எனவே சென்னைக்கு வெளியே முதல் வெற்றியை பெற வேண்டும் என சிஎஸ்கே தீவிரம் காட்டும். மும்பை அணியோ நடப்பு தொடரின் ஆரம்பத்தில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தாலும், கடைசி இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகளை அதிரடியாக வென்று பழைய கடப்பாரை அணியாக மீண்டும் உருவெடுத்துள்ளது.
Back to WankheDEN ft. Homeboys!WhistlePodu #Yellove pic.twitter.com/PysXkVzVL4
— Chennai Super Kings (@ChennaiIPL) April 13, 2024
வான்கடேவில் மும்பை தொடர் ஆதிக்கம்
தற்போது சொந்த மைதானத்தில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) உள்ளது. வான்கடேவில் சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை நல்ல ரெக்கார்டையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வான்கேடவில் இரு அணிகளும் 11 முறை மோதி உள்ளன. இதில் 7 முறை மும்பையும், 4 முறை சிஎஸ்கேவும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடர்களில் இரு அணிகளும் 36 முறை நேர் நேர் மோதி உள்ளனர். அதில் மும்பை அணி 20 முறையும், சிஎஸ்கே 16 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலும் சிஎஸ்கே அணியே வென்றது குறிப்பிடத்தக்கது.
Humne kya bigaada tha, #MumbaiMeriJaan #MumbaiIndians | @surya_14kumar pic.twitter.com/n5QC6Wolam
— Mumbai Indians (@mipaltan) April 13, 2024
ஆடுகளங்கள் எப்படி?
வான்கடே மைதானத்தில் (Wankhade Stadium) இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளிலும் வான்கடேவின் 7ஆம் நம்பர் ஆடுகளத்தில்தான் நடைபெற்றது. இந்த ஆடுகளத்தின் ஸ்கொயர் பவுண்டரிகள் 63 மீட்டர் மற்றும் 65 மீட்டராக இருக்கும். நேர்திசையில் பவுண்டரிகள் 74 மீட்டரில் இருக்கும்.
இந்த ஆடுகளத்தில் முதல் போட்டியில் மும்பை அணி 125 ரன்களிலேயே சுருண்டது. அதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் அணியின் போல்ட் மற்றும் நான்ரே பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களின் ஸ்விங்தான். அந்த பொறியில்தான் மும்பை விழுந்தது. ஆனால் இரண்டாவது போட்டி மாலை நேரத்தில் நடைபெற்றதால், அதனை சாதகமாக பயன்படுத்தி 234 ரன்களை குவித்தது. மறுபுறம் சேஸிங்கில் டெல்லியும் 205 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
அதே பிட்ச்…?
ஆர்சிபி அணிக்கு எதிராக கடந்த ஏப். 11ஆம் தேதி நடைபெற்ற போட்டி என்பது வேறொரு ஆடுகளத்தில் நடைபெற்றது, அந்த பிட்சில் ஸ்கொயர் பவுண்டரிகள் 65 மீட்டர் மற்றும் 59 மீட்டராக இருந்தது. அதுவும் செம்மண் பிட்ச் என்பதால் பேட்டிங்கிற்கே சாதகமாக இருந்தது. 196 ரன்களை ஆர்சிபி அடித்தாலும், இரவில் நிலவிய பனி மற்றும் ஆர்சிபியின் மோசமான பந்துவீச்சு மும்பை அணியை வெறும் 93 பந்துகளில் இலக்கை அடைய வைத்தது எனலாம். எனவே, நாளை சென்னை அணிக்கு எதிராக மும்பை அணி பெரும்பாலும் ஆர்சிபி அணிக்கு கொடுத்த அதே ஆடுகளத்தை (MI vs CSK Pitch) கொடுக்கவே பார்க்கும்.
அடுத்த தலைமுறையின் El Clasico
டாஸை வெல்லும் அணிக்கே பாதி வெற்றி என்பது வான்கடேவில் அதிகம் பேசப்படும் ஒன்று. பனியின் தாக்கம், மும்பையின் பேட்டிங் டெப்த் ஆகியவற்றை பார்க்கும்போது சிஎஸ்கே அணியும் டாஸை வெல்லவே பார்க்கும். சிஎஸ்கே அணி முதல் நான்கு போட்டிகளிலும் டாஸை தோற்ற நிலையில், கடைசி போட்டியில் மட்டுமே வென்றது. அந்த அதிர்ஷ்டம் சிஎஸ்கே அணிக்கு மும்பையிலும் நீடித்தால் சிஎஸ்கேவின் பக்கம் ஆட்டம் செல்லலாம். நிச்சயம் முதலில் பேட்டிங் செய்யும் அணி 220 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். இருப்பினம் மும்பை அணிக்கே அதிக சாதகம் இருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
இந்த தொடரில் மும்பை – சிஎஸ்கே அணிகள் மோதும் ஒரே போட்டி இதுதான். எனவே, தோனி – ரோஹித் இருவரும் கேப்டனாக இல்லாத சூழலில், இந்த El Clasico எப்படி இருக்கப்போகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.