ஆல்வார் (ராஜஸ்தான்): பிரதமர் நரேந்திர மோடியிடம் 10 ஆண்டு கால சாதனையும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமும் இருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதனை நிறைவேற்றவில்லை. ராஜஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் மட்டுமல்ல, இங்குள்ள தாய்மார்களும் இதனை நன்கு அறிவார்கள். 2014-ல் மோடியை நீங்கள் நாட்டின் பிரதமராக்கியபோது, ’ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ என்ற வாக்குறுதியை நிறைவேற்றி, நாட்டின் ராணுவ வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் அவர் கவுரவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில், சாத்தியமற்றதாகத் தோன்றிய பல பணிகளை மோடி செய்து முடித்துள்ளார். மோடியிடம் 10 ஆண்டு கால சாதனையும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமும் இருக்கிறது. எனவே, இந்தத் தேர்தலில் மோடியை மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக ஆக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இங்கு வந்து ராஜஸ்தான் மக்களுக்கும் கஷ்மீருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டுள்ளார். ராஜஸ்தானுக்கு கஷ்மீர் சொந்தமில்லையா? வாக்கு வங்கி மீதான பேராசையில்தான் காங்கிரஸ் கட்சி 370-வது சட்டப்பிரிவை இத்தனை ஆண்டுகளாகப் பிடித்துக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் 5, 2019 அன்று, மோடி 370-வது பிரிவை ரத்து செய்து கஷ்மீரில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
நதிகள் இணைப்பை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் இங்கு நிறைவேற்றப்பட்டு தண்ணீர், முழு ஆல்வார் நகருக்கும் கிடைக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்தில் இருந்து ஆழ்வார்க்கு தண்ணீர் கிடைக்காது என காங்கிரஸ் பொய்களை பரப்பி வருகிறது. ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் வந்து சேரும் என்று சொல்கிறேன். இது மோடியின் உத்தரவாதம்.
பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற பிரச்சாரத்தை மோடி தொடங்கினார். இதன் காரணமாக பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதமும், பெண் குழந்தைகளின் கல்வி விகிதமும் அதிகரித்துள்ளது. ஆனால், ‘மகனை காப்பாற்றுங்கள் – பிரதமராக்குங்கள்’ என்ற ஒரே முழக்கத்துடன் காங்கிரஸ் இயங்குகிறது. சோனியா காந்தியின் முழு கவனமும் ராகுல் காந்தியை பிரதமராக்குவதிலேயே உள்ளது; உங்கள் மகன்கள் மற்றும் மகள்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் அல்ல” என்று அமித் ஷா பேசினார்.