சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி மும்பை தான்! புள்ளி விவரத்தை பாருங்க பாஸ்

ஐபிஎல் வரலாற்றில் டாப் இரண்டு அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இரண்டு அணிகளுமே ஐபிஎல் கோப்பையை தலா ஐந்து முறை கைப்பற்றியுள்ளன. ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸூம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையிலும் களம் கண்டு இந்த சாதனைகளை படைத்தன. ஆனால் இம்முறை இருவருமே கேப்டன்களாக இல்லாமல் அந்த அணிகளில் ஒரு பிளேயராக மட்டுமே விளையாடுகின்றனர். இந்த சூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதுவரை மும்பை – சென்னை அணிகள் நேருக்கு நேர்

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை 36 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி 20 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. சென்னை அணி அதிகபட்சமாக 218 ரன்களும், மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 219 ரன்களும் எடுத்திருக்கின்றன. குறைந்தபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 136 ரன்களும், சென்னை சூப்பர் 79 ரன்களும் எடுத்திருக்கின்றன. கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் 4 போட்டிகளில் சென்னை அணி 3 போட்டிகளிலும், மும்பை ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

ஐபிஎல் 2024ல் இரு அணிகளும்

ஐபிஎல் 2024 தொடரைப் பொறுத்தவரை இரண்டு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி இருக்கின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. புள்ளிப் பட்டியலை பொறுத்தவரை சென்னை அணி மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 7வது இடத்திலும் இருக்கின்றன. இந்த ஐபிஎல் சீசனைப் பொறுத்தவரை ரன்ரேட் மட்டுமே முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் போட்டியில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் ரன்ரேட்டிலும் ஐபிஎல் அணிகள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

வீரர்களாக களமாடும் ரோகித், தோனி

இதுவரை கேப்டனாக மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த தோனியும், ரோகித் சர்மாவும் இந்த ஐபிஎல் சீசனில் பிளேயர்களாக விளையாடுகின்றனர். முதல்முறையாக இந்த சீசனில் இருவரும் எதிராக சந்திக்க உள்ளனர். அவர்கள் இருவரின் ஆட்டத்தையும் பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். கேப்டனாக ரோகித், தோனி இல்லாவிட்டாலும் அவர்களை முன்னிலைப்படுத்தியே ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூட எல் கிளாசிகோ போஸ்டரை வெளியிட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.