1947-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. அப்போது ஏராளமான மக்கள் தங்களுடைய மிகவும் விலையுயர்ந்த உடைமைகளை விட்டுவிட்டு மற்றொரு நாட்டுக்குக் குடிபெயர்ந்தனர். என்றாவது ஒருநாள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புவோம் என அவர்கள் கருதிய நிலையிலேயே 75 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றளவும் அந்தப் பிரிவினையின் வலியும், வேதனையும் அந்தப் பகுதி மக்களின் மனங்களில் ஆறாத வடுவாகவே இருக்கிறது.
இந்த நிலையில்தான் சமூக வலைதளங்களில் லாகூரைச் சேர்ந்த பேராசிரியர் அமின் சோஹன் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், படாலா பகுதியில் வசித்து வரும் பேராசிரியர் அமின் சோஹனின் நண்பர் பல்விந்தர் சிங். 1947-ம் ஆண்டின் பிரிவினையின் போது, பேராசிரியர் அமின் சோஹன் வீட்டின் பழைய கதவு ஒன்று இந்தியாவிலேயே இருந்தது. அந்தக் கதவு பேராசிரியர் அமின் சோஹனிடம் திரும்ப ஒப்படைக்க விரும்பிய பல்விந்தர் சிங், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து கதவு பார்சல் செய்யப்பட்டது. அந்தக் கதவு மும்பை, துபாய், கராச்சி வழியாக சர்பிரைஸாக லாகூர் சென்றிருக்கிறது. அந்தக் கதவைப் பார்த்த பேராசிரியர் அமின் சோஹன், நெகிழ்ந்து, அந்தக் கதவுக்கு முத்தம் கொடுத்து, பழைய நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். மேலும் அதை பத்திரமாக வீட்டில் இறக்கி வைத்தார். இது தொடர்பாகப் பகிரப்பட்ட வீடியோவில், “இது படாலாவின் கோமன் பிண்டில் உள்ள பேராசிரியரின் தந்தையின் வீட்டிலிருந்து வரும் பழைய கதவு. பல நினைவுகள், வரலாற்றுக் கதைகள் நிறைந்த இந்த கதவு, படாலாவிலிருந்து வெகுதூரம் பயணித்து கராச்சியின் லாகூர் வரை வந்திருக்கிறது.
அமின் சோஹன் தேய்ந்து போன மரத்தைப் பார்க்கும்போது, அவரால் அழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கதவின் அர்த்தத்தையும் அது வைத்திருக்கும் நினைவுகளையும் 1947-ல் பிரிவினை ஏற்படுத்தி மக்களைப் பிரித்த போதும், பஞ்சாபியர்களின் இதயங்களைப் பிரிக்க முடியவில்லை, அவர்கள் இப்போதும், அவர்களின் பரம்பரை மற்றும் நட்புடன் இணைந்திருந்தனர்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவுக்கு கீழ் பலரும் பாராட்டி, வாழ்த்திப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சமூக வலைதளப் பயனர், ‘மிகவும் அழகு! சகோதரத்துவத்தின் உண்மையான அர்த்தம் இதுதான்’ என்றும் மற்றொருவர், ‘1947 சுதந்திரம் பற்றியது மட்டுமல்ல. பல உயிர்களின் கண்ணீர், தியாகங்கள், வாழ்நாள் முழுவதும் பிரிவினைகள் நிறைந்த கதைகளையும் பற்றியது’ என்றும், வேறொருவர், `எப்போதும், மதம், இனம், மொழி, நிறம் என்பவற்றால் ஏற்படும் பிரிவினைவாதம் துன்பத்தையே பரிசளிக்கும். நினைவுகளை மீட்டுக் கொடுத்த பல்விந்தர் சிங்குக்கு வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.