லக்னோ: மக்களவைத் தேர்தலில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல் ஆணையம் வீட்டு வசதி குடியிருப்பு சங்கங்களுக்குள் வாக்குப்பதிவு மையங்களை அமைக்கும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்தப் புதிய முயற்சி குறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் நவ்தீப் ரின்வா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “கடந்த காலங்களில் குறைவான வாக்குகள் பதிவான நகர்ப்புறங்களைத் தேர்தல் ஆணையம் குறிவைத்தது. இந்தமுறை வாக்குப்பதிவு சதவீதத்தில் உத்தரப் பிரதேசம் முதல் இடம் பிடிக்கும். வாக்களர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க தடையாக உள்ள அனைத்து தடைகள் நீக்கப்படுவதை உறுதி செய்ய நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வந்து வாக்களிப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
கடந்த காலத்தில் வாக்குப்பதிவு குறைவாக இருந்த நகர்புறங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு சங்கங்களுக்குள் வாக்குச் சாவடிகளை அமைக்கும் புதிய முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற வாக்குச்சாவடிகள் அதிகமாக உள்ளன. நொய்டா இதில் முன்னணியில் உள்ளது. காசியாபாத், லக்னோ, கான்பூர், பரேலி மற்றும் மதுராவிலும் இதுபோன்ற வாக்குச்சாடிகள் உள்ளன.
உத்தரப் பிரதேச வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து முதல் இடத்தைப் பிடிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. மாநிலத்தில் இந்தமுறை 15.30 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளார்கள். மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட சோன்பாத்ரா மாவட்டத்தின் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
சோன்பத்ரா மாவட்டம் தனது எல்லையை பிஹார் , ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இதனை மனதில் கொண்டு காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடத்த தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளோம். பல கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதால் அந்த நேரத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல் வயதானவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சில உபகரணங்களையும் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 59.11 சதவீதம் வாக்குகள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.