ஆஸ்திரேலியா, சிட்னியின் போண்டி கடற்கரைக்கு அருகில் இயங்கி வந்த ஷாப்பிங் மால் ஒன்றில், அடையாளம் தெரியாத ஒருவர் பெரிய கத்தியுடன் உள்ளே நுழைந்து, கையில் சிக்குபவர்களை குத்தி, தாக்குதல் நடத்தினார். அவசர அழைப்பின்படி ஹெலிகாப்டர் மூலம் ஷாப்பிங் மாலுக்கு விரைந்த நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை மாலுக்குள் புகுந்து, தாக்குதல் நடத்தியவரை சுட்டு வீழ்த்தியது. எனினும், அவர் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர், “தாக்குதலின் நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவரின் அடையாளம் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இது பயங்கவராத செயல்தான். அந்த அளவுக்கு கொடூரமாக ஒவ்வொருவர்மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். குற்றவாளியை அடையாளம் காண நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். காயமடைந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு மத்தியில் மனதை உருகச் செய்யும் சம்பவம் ஒன்றும் நடந்திருக்கிறது. கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தவரில் 6 மாத பெண் குழந்தை ஹாரியட்டின் தாய் ஆஷ்லீ குட்டும் (36) ஒருவர். ஷாப்பிங் மாலில் தாக்குதல் நடத்தியவர் அவரை அணுகியபோது, அவர் அலறி ஓடினார். கத்திக் குத்தைச் சமாளிக்கப் போராடியும், குழந்தைக்கும் கத்திக் குத்து விழுந்திருக்கிறது. உயிருக்குப் போராடிய தாய், அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்று, குழந்தையை மட்டும், அங்கிருந்தவர்களிடம் கொடுத்து, உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்சியிருக்கிறார்.
அதனால் குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தைக்கு பல மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்தார். தற்போது இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நெகிழ்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.