ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மாணவர் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கோட்டா நகர காவல் கண்காணிப்பாளர் அமிர்தா துகான் கூறுகையில், “குன்ஹரி காவல் நிலையத்துக்கு கீழ் உள்ள லேண்ட் மார்க் நகரத்தில் உள்ள விடுதியில் இன்று காலை 6.15 மணிக்கு இந்தத் தீவிபத்து நடந்துள்ளது. இந்த விடுதியில் மொத்தம் 75 அறைகள் உள்ளன. அதில் 61 அறைகளில் மாணவர்கள் இருந்தனர். தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்துக்கு வந்து தீ மற்ற தளங்களுக்கு பரவாமல் தடுத்தனர்” என்றார்.
இந்த விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், “முதல்கட்ட விசாரணையில், ஐந்து தளங்களைக் கொண்ட அந்த விடுத்திக் கட்டிடத்தின் தரை தளத்தில் பொறுத்தப்பட்ட மின்மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. என்றாலும் விபத்து குறித்த காரணத்தை அறிய தடயவியல் குழு முயற்சித்து வருகிறது.
விபத்தில் தீவிர காயமடைந்த ஒரு மாணவர் உட்பட 6 பேர், இங்குள்ள மஹாராவ் பீம் சிங் (எம்பிஎஸ்) மருத்துவமனையில் முதல் உதவி சிசிச்சை அளிக்கப்படுகிறது. தீயில் இருந்து தப்பிப்பதற்காக முதல் மாடியில் இருந்து குதித்த 14 பேரில், காலில் முறிவு ஏற்பட்டுள்ள மாணவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
கோட்டா நகராட்சியின் தீயணைப்புத்துறை அதிகாரி ராகேஷ் விகாஸ் கூறுகையில், “தீ விபத்து நடந்துள்ள கட்டித்தில் தீ பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை. தீயணைப்பு துறையில் இருந்து தடையில்லாச் சான்று வாங்கப்படவில்லை. விடுதி கட்டிடத்துக்கு உள்ளே மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்தது” என்று தெரிவித்தார்.
விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வருபவரும், விபத்தில் காயமடைந்த பிஹாரைச் சேரந்த பவிஷ்யா என்ற மாணவர் கூறுகையில், “காலையில் 6.15 மணிக்கு கூச்சல் கேட்டு கண்விழித்து அறையை விட்டு வெளியே வந்து பார்த்தேன். எல்லா இடத்திலும் ஒரே புகையாக இருந்தது. கீழே இறங்கும் படி முழுவதும் புகையாக இருந்ததாலும் வெளியேற வேறு வழி இல்லாததாலும் பலர் முதல் மாடியில் இருந்து கீழே குதிக்க முடிவு எடுத்தனர்” என்றார்.
“விடுதி கட்டிடத்தில் இருந்து அனைத்து மாணவர்களும் மீட்கப்பட்டுவிட்டனர். வெளியேறும் அவசரத்தில் தங்களின் மொபைல் போன்களை எடுக்காத காரணத்தால், மாணவர்கள் தங்களின் பெற்றோர்களை தொடர்புகொள்ள உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று குன்ஹரி காவல்நிலைய சர்க்கிள் ஆய்வாளர் அரவிந்த் பரத்வாஜ் தெரிவித்தார்.