இந்திய சந்தையில் வரும் மே 9 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட நான்காம் தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சர்வதேச அளவில் சில நாடுகளில் முன்பே விற்பனைக்கு கிடைத்து வருகின்ற மாடலின் அடிப்படையில் தான் புதிய ஸ்விஃப்ட் தற்போது இந்திய சந்தைக்கு வரவுள்ளது இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலானது பல்வேறு வசதிகள் குறைக்கப்படும் மேலும் சில மாறுபாடுகளையும் பெற்றிருக்கும். குறிப்பாக சர்வதேச சந்தையில் கிடைக்கின்ற 360 டிகிரி கேமரா வசதி ADAS உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெறாது.
முந்தைய மாடலை விட மிக சிறப்பான மற்றும் உறுதியான கட்டுமானத்தை கொண்டிருக்கும் ‘HEARTECT’ பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள புதிய ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் நடைமுறையில் இருக்கின்ற பாரத் கிராஷ் டெஸ்ட் முறைகளுக்கு இணையான தரத்தினை கொண்டதாக அமைந்திருக்கும்.
எனவே, புதிய மாடலில் அடிப்படையாக ஆறு ஏர்பேக்குகள் ஏபிஎஸ் உட்பட இபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 3 புள்ளி கொண்ட இருக்கை பட்டைகள் நினைவூட்டலுடன் அனைத்து பயணிகளுக்கான வசதியாக சேர்க்கப்பட்டிருக்கும்
சர்வதேச சந்தையில் உள்ள புதிய Z12E 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5,700rpm சுழற்சியில் 82hp மற்றும் 4,500rpm சுழற்சியில் 108Nm டார்க் வழங்குகின்றது. மைல்டு ஹைபிரிட் பெற DC சிங்கோரேனஸ் மோட்டாரிலிருந்து 3.1hp மற்றும் 60Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜின் இந்திய சந்தைக்கு ஏற்ப சில மாறுதல்களுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் பெறக்கூடும்.
ஸ்விஃப்டின் இன்டிரியரில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நீக்கப்பட்டு புதிய 9 அங்குல தொடுதிரை ஃப்ரீஸ்டாண்டிங் சிஸ்டத்தில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன் பல்வேறு சுசூகி கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளும் இடம்பெற உள்ளது.
பலரும் விரும்பக்கூடிய அடிப்படையான டிசைன் கொண்டுள்ள மாருதி சுசூகி ஸ்விப்ட் கார் ஆனது மிகச் சிறப்பான வரவேற்பினை இந்திய சந்தையில் பெற்று இருக்கின்ற நிலையில் புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட மாடல் ஆனது கூடுதலான பலத்தை மாருதி சுசூகி நிறுவனத்திற்கு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.
முழுமையான விலை மற்றும் பல்வேறு வசதிகள் தொடர்பான அனைத்து விபரங்களும் மே மாதம் 9ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.