தேர்தல் விளம்பர அனுமதி மறுப்புக்கு எதிரான திமுக வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழுவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்ற விதிமுறை முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டனவா என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், “தேர்தல் ஆணைய விதிகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பங்களை இரண்டு நாட்களில் பரீசிலித்து அனுமதி தர வேண்டும் என்ற விதி உள்ளது. மக்களவைத் தேர்தலை ஒட்டி, இந்தியாவை காக்க “ஸ்டாலின் அழைக்கிறேன்” என்ற தலைப்பில், திமுக சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்படுகிறது. திமுகவின் இந்த தேர்தல் விளம்பரங்கள் சிலவற்றுக்கு அற்ப காரணங்களை கூறி தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கிறது.

திமுக விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் 6 நாட்கள் வரை கால தாமதம் செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும். திமுகவின் விளம்பரங்கள் தொடர்பான முன் அனுமதி விண்ணப்பங்களை நிராகரித்த தமிழக தேர்தல் அதிகாரியின் உத்தரவுகளை ரத்து செய்து, விளம்பரங்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், “தேர்தல் விளம்பரங்கள் தொடர்பாக விதிமுறைகளை வகுத்து தேர்தல் ஆணையம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டுள்ளது. அந்த விதிமுறைகளை எதிர்த்தும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வீடியோ விளம்பரங்களில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக கூறி, விளம்பரத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார்.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்து மாநில அளவிலான குழுக்களின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும். இந்த உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது” என்று குறிப்பிட்டார். அதற்கு திமுக தரப்பில், இந்த விதிகளின் மூலம் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிக்க முடியாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2023-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்து 10 மாதங்களுக்கு பிறகே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விளம்பரங்க்ளுக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் முறையிட முடியும் என்ற விதி முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 17-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.