சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே நேற்று இளைஞர் ஒருவர் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரின் தலையில் துப்பாக்கியை வைத்து இரண்டு பேர் மிரட்டினார்கள். அதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர், அவர்களிடமிருந்து தப்பி ஓட முயன்றார். இளைஞரின் சத்தம் கேட்டு அங்கு வந்த ஆட்டோ டிரைவர்கள், துப்பாக்கியை காட்டி மிரட்டியவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து பிடிப்பட்டவரை பூக்கடை காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பூக்கடை போலீஸார் கூறுகையில், “டீ குடித்துக் கொண்டிருந்த இளைஞரின் பெயர் ரோகன். இவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மருத்துவரான ரோகன், சென்னை மருத்துவக் கல்லூரியில் மேல் மருத்துவப் படிப்பு (பி.ஜி) படித்து வருகிறார். துப்பாக்கியால் மிரட்டியவர்கள் ரித்திக்குமார், அமித்குமார். இவர்கள் இருவரும் உ.பியைச் சேர்ந்தவர்கள். அமித்குமார், டெல்லியைச் சேர்ந்த பெண் மருத்துவருடன் பழகி வந்திருக்கிறார். அந்தப் பெண் மருத்துவர், தற்போது சென்னையில் ரோகனுடன் பி.ஜி படித்து வருகிறார். அதனால் ரோகனும் அந்தப் பெண் மருத்துவரும் பழகி வந்திருக்கிறார்கள். இது அமித்குமாருக்குப் பிடிக்கவில்லை.
அதனால் அந்தப் பெண் மருத்துவரையும், ரோகனையும் அமித்குமார் போனில் எச்சரித்திருருக்கிறார். ரோகனை போனில் தொடர்பு கொண்ட அமித்குமார், கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதன் பிறகும் ரோகனும் அந்தப் பெண் மருத்துவரும் பழகி வந்திருக்கிறார்கள். இதையடுத்து ஆத்திரமடைந்த அமித்குமார், தன்னுடைய நண்பர் ரித்திக்குமாருடன் சென்னை வந்து டீ குடித்துக் கொண்டிருந்த ரோகனின் பின்னந்தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தியிருக்கிறார். நல்லவேளையாக ரோகன் சுதாரித்துக் கொண்டு தப்பி விட்டார். டீ கடையின் அருகே இருந்த ஆட்டோ டிரைவர்களும் துப்பாக்கியால் மிரட்டிய ஒருவரைப் பிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர். அவர் அளித்த தகவலின்படி இன்னொருவரையும் பிடித்துவிட்டோம். இவர்கள் பயன்படுத்தியது கள்ளத்துப்பாக்கி. தோட்டாவையும் பறிமுதல் செய்திருக்கிறோம். ரோகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்திருக்கிறோம்” என்றனர்.
இது குறித்து மருத்துவர் ரோகன் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, “நானும் டெல்லியைச் சேர்ந்த அந்தப் பெண் மருத்துவரும் பழகி வந்தது அமித்குமாருக்குப் பிடிக்கவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு எனக்கு போன் செய்த அமித்குமார், அந்தப் பெண் மருத்துவருடன் பழகக் கூடாது என என்னை எச்சரித்தார். அதையும் மீறி பழகினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னுடன் படிக்கும் டெல்லியைச் சேர்ந்த பெண் மருத்துவர், அமித்குமார் என்னைக் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். என்னுடைய போட்டோவை எடுத்து வைத்த அமித்குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருக்கும் தகவலை அந்த டெல்லி பெண் மருத்துவர் என்னிடம் தெரிவித்தார். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில்தான் நான் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது பின்னந்தலையில் எதையோ வைத்து அழுத்துவது போல எனக்குத் தெரிந்தது. அதைப் பிடித்தபோதுதான் துப்பாக்கி எனத் தெரிந்தது. நான் சத்தம் போட்டதும் ஆட்டோ டிரைவர்கள் துப்பாக்கியை வைத்து மிரட்டியவரைப் பிடித்துவிட்டனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். எனவே என்னை துப்பாக்கியால் மிரட்டிவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
சென்னையில் பயிலும் மருத்துவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்ய வடமாநிலத்திலிருந்து வந்த இளைஞர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.