Chennai Super Kings Play Off Chance: நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தற்போது முரட்டு பார்முக்கு திரும்பியுள்ளதால் தொடர் இன்னும் சுவாரஸ்யமாக்கி உள்ளது. அனைத்து அணிகளும் தங்களின் 7வது லீக் போட்டிக்கு தயாராகி வருகின்றன.
தற்போதைய நிலையல், ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை, லக்னோ, சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் சற்று பலத்துடன் காணப்படுகிறது. குஜராத், மும்பை, பஞ்சாப் அணிகள் சிறப்பாக விளையாடினாலும் பலத்தை விட பலவீனங்கள் கூடுதலாக உள்ளது. எனவே, பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இப்போதிருந்தே அதிகரித்துவிட்டது.
சிஎஸ்கே அசாதாரண வெற்றி
நேற்றைய மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போதைய தொடரில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியுள்ளது. குறிப்பாக, டாஸை தோற்று முதலில் பேட்டிங் செய்தும், பனிப்பொழிவு இருந்தபோது பந்துவீசியும் சிஎஸ்கே அணி இந்த வெற்றியை தனதாக்கி உள்ளது.
மும்பை அணியில் ரோஹித் முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை களத்தில் நின்று 105 ரன்களை அடித்திருந்தாலும், அந்த அணியால் 207 ரன்கள் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. முதல் முறையாக சேப்பாக்கத்திற்கு வெளியே சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி சாதாரணமானது இல்லை என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
லக்னோ அணியில் இருக்கும் பெரிய ஓட்டை
அந்த வகையில், சிஎஸ்கே அணிக்கு அடுத்த இரண்டு போட்டி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராகவே உள்ளது. வரும் ஏப். 19ஆம் தேதி லக்னோவிலும், ஏப். 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்திலும் போட்டி நடைபெறுகிறது. இந்த இரு போட்டிகளிலும் சிஎஸ்கே அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளது. சேப்பாக்கத்தில் வீழ்த்த முடியாத அணியாக சிஎஸ்கே திகழ்ந்தாலும், லக்னோ எக்னா மைதானத்திலும் சிஎஸ்கேவுக்கே நல்ல வாய்ப்புள்ளது.
லக்னோ அணி கடந்த இரு போட்டிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவிடம் படுதோல்வியைடந்துள்ளது. 160 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸில் லக்னோ அணி அடித்தால் அந்த போட்டியில் தோற்கவே தோற்காது என்பது இரண்டு ஆண்டுகால சாதனையாக இருந்தது. ஆனால், அந்த இரண்டும் கடந்த இரு போட்டிகளில் சுக்கு நூறாக உடைக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், அந்த அணியின் பந்துவீச்சு ஏற்பட்ட பெரும் ஓட்டை எனலாம்.
மேஜிக்கை இழந்த லக்னோ பந்துவீச்சு
லக்னோ அணி இந்த தொடரில் மயங்க் யாதவ் என்ற புதையலை அறிமுகப்படுத்திய நிலையில், ஹாட்ரிக் வெற்றியை குவித்து அசத்தியது. ஆனால், மயங்க் யாதவ் காயத்தால் பங்கேற்காத சில போட்டிகளிலேயே அந்த மேஜிக்கும் மறைந்துவிட்டது எனலாம். மோஷின் கானும் தற்போது காயத்தில் இருந்து திரும்பியுள்ளது அந்த அணிக்கு ஆறுதல் என்றாலும் ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் அவர்களுக்கு பிரச்னையாக இருக்கிறது.
ஷாமார் ஜோசப் நிச்சயம் மேஜிக் நிகழ்த்துவார் என நம்பலாம், ஆனால் அவரை அடுத்த போட்டியில் லக்னோ களமிறக்குமா அல்லது நவீன் உல் ஹக்கிற்கே மீண்டும் போகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சுழற்பந்துவீச்சிலும் குர்னால் பாண்டியா, ரவி பிஷ்னோய் ஆகியோர் ரன்களை கசியவிடும் நிலையில், சிஎஸ்கேவில் தூபே இருக்கும் நிலையில், இவர்கள் மரண அடி வாங்குவது ஏறத்தாழ உறுதிதான். அர்ஷத் கானும் சுமாராகவே பந்துவீசுகிறார் என்பதால் சிஎஸ்கேவின் முரட்டு பேட்டிங் லைன் இந்த அணிக்கு பிரச்னையை கொடுக்கும்.
பேட்டிங்கிலும் பிரச்னை
அதேபோல், லக்னோ அணி பேட்டிங்கிலும் ராகுல், பூரன் மட்டுமே தொடர்ந்து ரன்களை சேர்க்கின்றனர். தற்போது பதோனியும் பார்முக்கு திரும்பியுள்ளார். டி காக், ஸ்டாய்னிஸ் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், லக்னோ அணியின் நம்பர் 3 பேட்டிங் பெரிய பிரச்னையாக இருக்கிறது. மூன்றாம் இடத்தில் தேவ்தத் படிக்கல் தொடர்ந்து சொதப்பிய நிலையில், ஹூடாவுக்கு அந்த இடத்தில் தற்போது வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அவரும் தொடர்ந்து சொதப்பியே வருகிறார். எனவே, சிஎஸ்கே அணி பந்துவீச்சாளர்களுக்கு இவர்களை கட்டுப்படுத்துவதில் பெரிய பிரச்னை இருக்காது.
6வது கப்…?
இந்த காரணங்களால் சிஎஸ்கே அணிக்கு அடுத்த 2 போட்டிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அடுத்த போட்டிகளையும் வெல்லும்பட்சத்தில் சிஎஸ்கே அணி 12 புள்ளிகளை பெற்றுவிடும். இதனால், சிஎஸ்கே அணியின் பிளே ஆப் கனவும் பிரகாசமாகும். தீபக் சஹார் காயத்தில் இருந்து மீண்டு வரும்பட்சத்திலும், மிட்செல் மற்றும் ரவீந்திரா தங்களின் முழு திறனையும் வெளிப்படுத்தும்பட்சத்திலும் சிஎஸ்கேவுக்கு 6வது கப் லோடிங் என தைரியமாக சொல்லலாம்.