RCB vs SRH Highlights: நடப்பு 17ஆவது ஐபிஎல் சீசனின் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாகவும், பரபரப்புடனும் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடப்பு தொடரின் 30வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று மோதியது.
முன்னர் கூறியது போலவே இன்றைய போட்டியும் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுத்த அணி சன்ரைசர்ஸ் அணிதான். சில நாள்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்களை குவித்து அந்த சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தனது அதே சாதனையை இன்று முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணி டாஸை தோற்று முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட நிலையில், அந்த அணி 20 ஓவர்களில் சின்னசாமி மைதானம் முழுவதும் வாணவேடிக்கை காட்டி 287 ரன்களை குவித்துள்ளது. இதில் 22 சிக்ஸர்கள் (132 ரன்கள்), 19 பவுண்டரிகள் (76 ரன்கள்) அடங்கும். தன்னிடம் இருந்த ஆறு பந்துவீச்சாளர்களையும் ஆர்சிபி அணி பயன்படுத்தியும் சன்ரைசர்ஸ் அணியின் அதிரடிக்கு முட்டுக்கட்டை போடவே முடியவில்லை.
பவர்பிளே ஓவர் முடிவிலேயே அந்த அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்களை அடித்தது, பவர்பிளே ஓவர்களிலேயே டிராவிஸ் ஹெட்டும் அரைசதத்தை கடந்துவிட்டார். அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களை சேர்த்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 108 ரன்களை சேர்த்தது. அவர் ஆட்டமிழந்தாலும் தனது அதிரடியை ஹெட் நிறுத்தவே இல்லை, மறுபக்கம் இறங்கிய கிளாசெனும் தன்னுடையை பங்குக்கு ஆர்சிபி பந்துவீச்சாளர்களை பதம்பார்த்தார்.
ஹெட் சதம் அடித்து ஆட்டமிழந்தார். அவர் 41 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளை பறக்கவிட்டு 102 ரன்களை குவித்து அதகளப்படுத்தினார். பெர்குசன் வீசிய ஸ்லோயர் பந்தில் டூ பிளெசிஸ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 248.78 ஆகும். மறுபுறம் கிளாசெனும் சிக்ஸர் மழையை பொழிந்து அரைசதத்தை கடந்தார். அவர் 31 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 67 ரன்கள் எடுத்து பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 216.13 ஆகும்.
@SunRisers continue to hold the record for the highest total in IPL history
#TATAIPL | #RCBvSRH pic.twitter.com/5VOG8PGB6X
— IndianPremierLeague (@IPL) April 15, 2024
ஆனால், மார்க்ரம் மற்றும் அப்துல் சமத் ஜோடி கடைசி வரை இருந்து தங்களின் அதிகபட்ச ஸ்கோர் சாதனையை முறியடித்தனர். மார்க்ரம் 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 32 ரன்களை குவித்தார். அப்துல் சமத் 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 37 ரன்களை அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுதான்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களும் இதுதான். மேலும், டி20 வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆசிய விளையாட்டு போட்டிகளில் மங்கோலியா அணிக்கு எதிரான போட்டியில் நேபாள அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்களை அடித்ததுதான் டி20 வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.