‘விஐபி’ கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி: சுங்கச் சாவடிகளில் கட்டண சலுகை விரைவில் ரத்து

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர், சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ மூலம் கட்டணம் செலுத்தி வருகின்றனர். ஆனால், குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

குறிப்பாக ஆம்புலன்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சகம், தீயணைப்பு, போலீஸ் மற்றும் உயரதிகாரிகளின் வாகனங்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி யார் யார் கட்டண சலுகை பெறக்கூடியவர்கள் என்ற விவரங்கள் அடங்கிய பெரும் அறிவிப்பு பலகைகள் சுங்கச் சாவடி வருவதற்கு முன்பே சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுங்கச் சாவடிகளில் இந்த விஐபி கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில் இனிமேல் அனைவரும் கட்டணம் செலுத்தியே தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் சுங்கச் சாவடிகளில் விஐபி.க்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மத்திய கேபினட் செயலாளர் தலைமையில் கடந்த வாரம் மத்திய அரசு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போதுதான், சுங்கச் சாவடிகளில் கட்டண சலுகையை ரத்து செய்வது முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யார் யார் கட்டண சலுகைக்கு உரியவர்கள் என்ற தகவல்களுடன் பெரிய அறிவிப்பு பலகைகளை ஒவ்வொரு சுங்கச் சாவடிகளின் இரு பக்கமும் வைப்பதால் மக்கள் பணம் வீணாகிறது என்று புகார்கள் எழுந்துள்ளன. இதனால் அரசு பணிகளில் உள்ள சில தரப்பினருக்கு அதிருப்தியும் எழுகிறது.

மேலும், பல நேரங்களில் உயரதிகாரிகள் அரசு வாகனத்தில் செல்லாமல், சொந்த வாகனத்தில் செல்லும் போது சுங்கச் சாவடிகளில் வாக்குவாதங்கள் எழுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்து போகும் நிலையும் உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, சுங்கச் சாவடிகளில் கட்டண சலுகை திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளில் செலுத்தும் கட்டணத்துக்கான தொகையை சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் ரசீதுகளை சமர்ப்பித்து அரசிடம் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வழி வகை செய்யப்படும் என்று தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.