`திட்டமிட்ட அழுத்தம்; நீதித்துறையை பாதுகாக்க வேண்டும்' சந்திரசூட்டுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்

மத்திய புலனாய்வுத் துறைகளால் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நீதிமன்றத்திலும் நிவாரணம் கிடைக்காததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருக்கு எதிரான ஊழல் வழக்கு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய பா.ஜ.க அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இந்த சூழலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளான தீபக் வர்மா, கிருஷ்ணா முராரி, தினேஷ் மகேஸ்வரி, எம்.ஆர். ஷா உள்ளிட்ட நீதிபதிகளும், உயர் நீதிமன்றங்களின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட 21 நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று கடிதம் எழுதியிருக்கிறது.

பாஜக, காங்கிரஸ்

அதில்,“நீதித் துறைக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட அழுத்தம், தவறான தகவல்கள், நீதிமன்ற தீர்ப்பை குறைமதிப்பிற்குட்படுத்துதல் போன்ற சில பிரிவினரின் தீவிர முயற்சிகள் கவலையளிக்கிறது. குறுகிய அரசியல் நலன்கள் மற்றும் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவும், நீதித்துறையின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில், அடிப்படையற்ற கோட்பாடுகளைப் பரப்புவது முதல் நீதித்துறை தீர்ப்புகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள வெளிப்படையான மற்றும் ரகசிய முயற்சிகளில் ஈடுபடுவது வரை… நாட்டின் நீதித்துறை அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்க முயல்கிறார்கள்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பின்னணியில் நடக்கிறது. நீதித்துறை சுதந்திரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில், நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் நேர்மை மீது சந்தேகங்களை முன்வைப்பதன் மூலம், நீதித்துறை செயல்முறைகளைத் திசைதிருப்ப நயவஞ்சகமான முறைகளை விமர்சகர்கள் பின்பற்றுகின்றனர்.

நீதி

இத்தகைய செயல்கள் நமது நீதித்துறையின் புனிதத்தை அவமதிப்பதாகும். ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் நீதித்துறை, நிலையற்ற அரசியல் நலன்களின் விருப்பங்களிலிருந்து விடுபடுவது இன்றியமையாதது. எனவே இத்தகைய அழுத்தங்களுக்கு எதிராக நீதித்துறை பலப்படுத்தப்பட வேண்டும். நீதித்துறையின் புனிதத்தன்மை, தன்னாட்சி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.