ஜம்மு: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் தைரியம் ஜம்மு காஷ்மீரில் இன்று யாருக்கும் இல்லை என்றும், பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் யாரேனும் அதிகபட்சமாக பலன் அடைந்திருக்கிறார்கள் என்றால் அது ஜம்மு காஷ்மீர் சகோதர, சகோதரிகள் தான் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்முவின் பலூரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “ஜம்மு காஷ்மீரில் இதுபோன்று ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு சகாப்தம் இருந்தது. கல் வீச்சு, துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்புகள் என வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. அப்போது, ஜம்மு காஷ்மீரில் வேலைநிறுத்தம் நடத்த பாகிஸ்தானில் இருந்து அறிவிப்புகள் வெளியிடப்படும். சட்டப்பிரிவு 370-ன் தீய நிழல் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பரவி இருந்தது.
இன்று, சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, பயங்கரவாதம் மரணப் படுக்கையில் உள்ளது. கையில் கற்களை வைத்திருந்த இளைஞர்கள் இப்போது மடிக்கணினிகளை ஏந்தியிருக்கிறார்கள்.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவையும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தியிடம் நான் கேட்க விரும்புகிறேன், ஜம்மு காஷ்மீரில் யாருடைய ஆட்சிக்காலத்தில் அதிகபட்ச போலி என்கவுன்ட்டர்கள் நடந்தன? காஷ்மீர் குழந்தைகளின் கைகளில் துப்பாக்கிகளைக் கொடுத்தது யார்?
ஜம்மு காஷ்மீரில் நடந்த போலி என்கவுன்டர்களை நிறுத்தி பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்தவர் பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் யாரேனும் அதிகபட்சமாக பலன் அடைந்திருக்கிறார்கள் என்றால் அது ஜம்மு காஷ்மீர் சகோதர, சகோதரிகள் தான்.
பிரதமர் மோடியின் ஆட்சியில், குஜ்ஜார், பஹாரி, பகர்வால், ஓபிசி, தலித்துகள் மற்றும் பெண்களுக்கு பாஜக இட ஒதுக்கீடு அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் தைரியம் இன்று யாருக்கும் இல்லை. ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷங்கள் மட்டுமே கேட்கும்.
370வது சட்டப்பிரிவை நீக்கினால் மூவர்ணக்கொடிக்கு தோள் கொடுக்க யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள் என்று மெகபூபா முப்தி கூறினார். மூவர்ணக் கொடி அழியாதது, மேலும் மூவர்ணக் கொடி இன்னும் பெருமையுடனும் புகழுடனும் பறந்துகொண்டே இருக்கும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.