பிஎஸ்பி வேட்பாளர் பட்டியல்: வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கும் அதர் ஜமால் லாரி

லக்னோ: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பதினொரு வேட்பாளர்களின் புதிய பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டது. வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி அதர் ஜமால் லாரியை களமிறக்கியுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.

அதன்படி, வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி அதர் ஜமால் லாரியை களமிறக்கியுள்ளது.

மேலும் புடான் தொகுதியில் முஸ்லிம் கானை நிறுத்தியுள்ளது. பரேலியில் சோட்டலால் கங்வார் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். உதய் ராஜ் வர்மா சுல்தான்பூர் தொகுதியிலும், கிராந்தி பாண்டே ஃபரூகாபாத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். மெயின்புரி தொகுதியில் சிவபிரசாத் யாதவுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

பண்டா மக்களவைத் தொகுதியில் பிஎஸ்பி வேட்பாளராக மயங்க் திவேதியும், துமரியகஞ்ச் தொகுதியில் குவாஜா ஷம்சுதினும் போட்டியிடுகின்றனர். பல்லியா தொகுதியில் லல்லன் சிங் யாதவ் மற்றும் ஜான்பூரில் வேட்பாளராக ஸ்ரீகலா சிங் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

அதே வேளையில், காஜிபூரில் சமாஜ்வாதி கட்சியின் அப்சல் அன்சாரியை எதிர்த்து உமேஷ் குமார் போட்டியிடுகிறார். முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை எதிர்பார்த்து பிஎஸ்பி வாரணாசியில் லாரியை களமிறக்கியுள்ளதாக பலர் கூறுகின்றனர்.

இந்த தொகுதியில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட சமூக வாக்காளர்கள் உள்ளனர். வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய லாரி, “பகுஜன் சமாஜ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி இருக்கும்” என்றார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.