புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா கொல்கத்தா? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் சூப்பராக விளையாடி வருவதால் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

5 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா 4 வெற்றி (ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோவுக்கு எதிராக) ஒரு தோல்வி (சென்னைக்கு எதிராக) என 8 புள்ளிகளுடன் உள்ளது. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன் இலக்கை கொல்கத்தா 15.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. அதில் விக்கெட் கீப்பர் பில்சால்ட் 89 ரன்கள் நொறுக்கினார். அந்த அணியில் சால்ட், சுனில் நரின், ஸ்ரேயாஸ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்கும் நல்ல நிலைக்கு திரும்பி விட்டார். சொந்த ஊரில் ஆடுவது கொல்கத்தாவுக்கு கூடுதல் பலமாகும். இந்த சீசனில் உள்ளூரில் ஆடியுள்ள 2 ஆட்டத்திலும் கொல்கத்தா வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு தொடரில் 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. லக்னோ, டெல்லி, மும்பை, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளை தோற்கடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்சுக்கு எதிராக மட்டும் தோல்வியை சந்தித்துள்ளது.

ஜோஸ் பட்லர், அஸ்வின் ஆகியோர் காயத்தால் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்திற்கு திரும்புவார்களா என்பது குறித்து அணி நிர்வாகம் தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனாலும் சாம்சன், ரியான் பராக், ஜெய்ஸ்வால், டிரென்ட் பவுல்ட், யுஸ்வேந்திர சாஹல் என்று நட்சத்திர வீரர்களுடன் ராஜஸ்தான் வலுவாகவே உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13-ல் ராஜஸ்தானும், 14-ல் கொல்கத்தாவும் வெற்றி கண்டுள்ளது. ஏறக்குறைய சரிசமமான பலத்துடன் மல்லுக்கட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரின், ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல், ரிங்கு சிங் அல்லது ரமன்தீப்சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் ஆரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.

ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், தனுஷ் கோடியன் அல்லது பட்லர், சஞ்சு சாம்சன் கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், ரோமன் பவெல், குல்தீப் சென் அல்லது ேகஷவ் மகராஜ், டிரென்ட் பவுல்ட், அவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.