மும்பை,
மராட்டியம் மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள காஞ்னர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் தக்வாலே. ஓட்டல் தொழிலாளி. இவரது முதல் மனைவி உயிரிழந்து விட்டார். முதல் மனைவி இறந்த பிறகு சந்தோஷ் தக்வாலே வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஓட்டல் தொழிலாளிக்கு முதல் மனைவி மூலம் பிறந்த 12 வயதில் சோகம் என்ற மகனும், சிவானி (8), திபானி (7) என்ற மகள்களும் இருந்தனர்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் 3 பிள்ளைகளையும் ஜல்னா மாவட்டம் அம்பாத் தாலுகாவில் உள்ள தோமேகாவ் கிராமத்துக்கு அழைத்து சென்றார். பிள்ளைகளும் தந்தையுடன் ஆசையாக கிராமத்துக்கு சென்றனர். விடுமுறையை தந்தையுடன் கொண்டாடலாம் என்று சென்ற பிள்ளைகளுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
சம்பவத்தன்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்த கிணற்றில் ஓட்டல் தொழிலாளி திடீரென மகன், 2 மகள்களையும் தூக்கி வீசினார். இந்த கொடூரத்தை சற்றும் எதிர்பாராத பிள்ளைகள் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்தது குறித்து ஓட்டல் தொழிலாளி போலீசாரை தொடர்பு கொண்டு கூறினார். பின்னர் செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கிணற்றில் மிதந்த 3 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான சந்தோஷ் தக்வாலேயை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற பிள்ளைகளை தந்தையே கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.