நாடாளுமன்றத்தில் 10 ஆண்டுகளாக பா.ஜ.க-வுக்கு எதிர்வரிசையில் தனித் தனியாக அமர்ந்திருந்த பல எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியாக, பா.ஜ.க-வை தீவிரமாக எதிர்த்துவருகிறது. தேர்தல் பத்திர முறைகேடு, ஜி.எஸ்.டி, வேலைவாய்ப்பின்மை, பெட்ரோலியம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலையுயர்வு ஆகியவற்றைக் குறிப்பிட்டு பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்று இந்தியா கூட்டணி பரப்புரை செய்துவருகிறது. மறுபக்கம், `ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா கூட்டணியை வீழ்த்த வேண்டும்’ என்று தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க பிரசாரம் செய்துவருகிறது.
இதற்கிடையில், `மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றிவிடுவார்கள்’ என்ற முக்கிய வாதத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களிடம் முன்வைத்து வருகின்றன. அதற்கேற்றாற்போலவே, `அரசியலமைப்புச் சட்டம் இன்றளவும் முழுமை பெறாத ஆவணமாகவே இருக்கிறது’ என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, `அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவர 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும்’ என பா.ஜ.க எம்.பி அனந்த் குமார், `அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. மாற்றம் என்பது வளர்ச்சியின் அடையாளம். அது மோசமான விஷயமல்ல’ என உத்தரப்பிரதேச பா.ஜ.க வேட்பாளர் அருண் கோவில் போன்றோர் கூறிவந்திருக்கின்றனர்.
இருப்பினும், இத்தகைய கூற்றுகளுக்கு பா.ஜ.க தலைமை பெரிதாகப் பதிலளிக்காமலிருந்த நிலையில், `அம்பேத்கரே வந்தாலும் அவரால் அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க முடியாது’ என பிரதமர் மோடி கடந்த வாரம் கூறியிருந்தார். இந்த நிலையில், `அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களைத் தண்டிக்கும் தேர்தல் இது’ என மோடி கூறியிருக்கிறார்.
பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க பேரணியில் கலந்துகொண்டு பேசிய மோடி, “திமிர்பிடித்த கூட்டணித் தலைவர்களைத் தண்டிப்பதற்காக மட்டுமே இந்தத் தேர்தல். அதுமட்டுமல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களையும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மத்திய அரசு எடுக்கும் முன்முயற்சிகளை எதிர்ப்பவர்களையும் தண்டிக்கும் தேர்தல் இது.
காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் என்னைத் துஷ்பிரயோகம் செய்வதற்காக அரசியல் சாசனத்தின் பெயரால் பொய்களைப் பரப்புகின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி மதிக்கிறது. இனி, பாபாசாகேப் அம்பேத்கரால்கூட இதை மாற்ற முடியாது. எதிர்க்கட்சிகள் சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா என்று அழைக்கிறார்கள். ஒரு இடம் வெல்வதற்குக்கூட அவர்களுக்குத் தகுதியில்லை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.