ராய்கஞ்ச் (மேற்கு வங்கம்): நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தின் ராய்கஞ்ச் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் நடந்தது வெறும் டிரெய்லர்தான். நாம் தேசத்தையும் மேற்கு வங்கத்தையும் நீண்ட காலம் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் மாநிலத்தை மிகவும் பின்தங்கிய நிலையில் விட்டுவிட்டனர். இருப்பினும், மேற்கு வங்கத்தின் வளர்ச்சியே மோடியின் முன்னுரிமை.
அயோத்தியில் உள்ள பிரமாண்ட கோயிலில் வீற்றிருக்கும் குழந்தை ராமருக்கு இது முதல் ராம நவமி. ராம நவமி ஊர்வலத்துக்கு மம்தா பானர்ஜி அரசு அனுமதி வழங்காது என எனக்குத் தெரியும். ராம நவமி கொண்டாட்டங்களை தன்னால் இயன்றவரை தடுக்க திரிணமூல் காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால், ராம நவமி ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. நாளை நடைபெற உள்ள ராம நவமி ஊர்வலங்களில் பங்கேற்க உள்ள மேற்கு வங்க சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
மேற்கு வங்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன் புத்தாண்டு தொடங்கியது. இந்தப் புத்தாண்டு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. மேற்கு வங்கத்தின் லட்சியங்கள் இந்தியாவுக்கான பாஜகவின் பார்வையின் ஒரு பகுதியாகும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வரும் 5 ஆண்டுகளுக்கு 3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்படும். மேற்கு வங்கத்தில் இணைப்பை மேம்படுத்த வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களின் நெட்வொர்க் விரிவாக்கப்படும். இந்தியாவின் கிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில்களை கொண்டு வர நாங்கள் விரும்புகிறோம்.
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக செய்தவை நமது சாதனைகளின் பட்டியல் மட்டுமல்ல, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் அரசாங்கங்கள் எதைச் சாதிக்கவில்லை என்பதற்கான பட்டியலும்கூட.
மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறோம். ஆனால், மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் அரசு, மோடியின் திட்டங்கள் இங்குள்ள மக்களைச் சென்றடையாமல் இருக்க முயற்சிக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் நலத் திட்டங்களை ஒன்று தடுத்து நிறுத்துகிறது அல்லது அதன் மீது ஸ்டிக்கரை ஒட்டுகிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.