மதுரை: தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கும் செயலாகும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலெட்சுமி. இவர் கடந்த 2011 தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: “இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவில் பழங்காலத்தில் கூட ஜனநாயகம் நிலவியதாக கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பரிசுகள், பணம் உள்ளிட்டவை கொடுப்பது ஒரு வகையில் லஞ்சம் தான். இந்த பழக்கம் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே தகர்த்துவிடும்.
வாக்களார்களுக்கு பணம், பரிசுப் பொருள் வழங்குபவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்கலாம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தண்டனை குறைவாக இருப்பதால் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் பழக்கம் குறையாமல் உள்ளது. தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த மக்களவைத் தேர்தலில் இதுவரை ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தேர்தல் நடைமுறை தொடங்கி 15 நாள் முடிந்துள்ளது. தேர்தல் முடிய இன்னும் 65 நாட்கள் உள்ளன. கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போதும் வசூலிக்கப்பட்ட தொகையை விட இந்த 15 நாளில் பிடிபட்ட தொகை அதிகமாகும். தேர்தலில் பணப் பட்டுவாடாவைக் கண்காணிக்க தேர்தல் ஆணையத்தால் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன. இந்த குற்றங்களுக்கான தண்டனை விபரங்கள் போதுமானதாக இல்லாததால், இந்த வழக்குகள் புள்ளிவிவர நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படுகிறதோ என தோன்றுகிறது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 2011-ல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பத்து ஆண்டுக்கு பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்குகளை திறம்பட நடத்த புதிய வழிமுறைகளை கண்டறிய நீதிமன்றம் விரும்புகிறது. இதனால் 2019 மக்களவைத் தேர்தல், 2021-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை என்ன?
அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்குகள் எத்தனை? தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள் எத்தனை? இந்த வழக்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.