சிவகங்கை: ‘‘பாஜக தேர்தல் அறிக்கை 3 மணி நேரத்திலேயே புதைந்து விட்டது’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையில், அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை தொகுதியில் விநோதமான போட்டி நிலவுகிறது. எதிர ணியில் நிற்கும் 2 வேட்பாளர்கள் சுற்றுலாப் பயணிகள் போல் வந்துள்ளனர். தமிழ் மண்ணுக்கு சம்பந்தம் இல்லாதவர், தொகு திக்குள் செல்ல பாதை கூட தெரியா தவர் பாஜகவில் நிற்கிறார். அவர் சிவகங்கை தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். 2014 முதல் 2024 வரை பாஜக ஆட்சியில் இருந்தது. அதில் 7 ஆண்டுகள் தமிழகத்தில் அதிமுக அரசு இருந்தது. அதிலும் 2014 முதல் 2019 வரை சிவகங்கை தொகுதியில் அதிமுக எம்பி இருந்தார்.
காளையார்கோவில் மத்திய அரசு நூற்பாலை விரிவாக்கப் பணிக்கு நாங்கள் ரூ.53 கோடி ஒதுக்கினோம். ஆனால், தற்போது அந்த ஆலை மூடிக் கிடக்கிறது. சிவகங்கை நறுமணப் பூங்காவைத் தொடங்கினோம். அது 10 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. தொடங்குவது காங்கிரஸ் அரசு, கிடப்பில் போட்டது பாஜக அரசு. அதற்கு உடந்தையாக இருந்தது அதிமுக அரசு. இதற்கு பாஜக, அதிமுக பதில் சொல்ல வேண்டும்.
40 ஆண்டுகள் அமைதி பூமி யாக இருக்கும் சிவகங்கை தொகுதியில் சாதி அடிப்படையில் வாக்கு கேட்பது மிகப்பெரிய அவமானம். சாதி வேறுபாட்டை தூண்டுவது மக்களுக்கு இழைக் கும் துரோகம். இதற்கு மக்கள் தெளிவான முடிவை தருவர். அடிக்கடி தமிழகம் வரும் பிரதமர் தொடர்ந்து பழைய பல்லவியையே பேசுகிறார். வெள்ளம் வந்தபோது வராதவர்; நிவாரண நிதி கொடுக்காதவர்; மூடிக் கிடந்த ஆலைகளை திறக்க சொன்னபோது பதில் சொல்லாதவர். தற்போது எந்த அடிப்படையில் தமிழகத்துக்கு வரு கிறார்.
தமிழுக்கு ரூ.74 கோடியும், வழக்கில் இல்லாத சம்ஸ்கிருதத்துக்கு ரூ.1,500 கோடியும் ஒதுக்கினர். தற்போது திருவள்ளுவர் மையத்தை அமைக்கப் போவதாக மோடி கூறுகிறார். தமிழுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கிவிட்டு பேசியிருக்கலாம். அந்தந்த மாநிலங்களுக்கே தங்களது தொழில்களை வளர்க்கத் தெரியும். ஆனால், நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாப்பதுதான் பிரதமர் கடமை. அதை அவர் செய்யாதது தமிழக மக்கள் மனதில் வடுவாக உள்ளது. அந்த வடு இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக தற்போது கூறுவது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ் காரம் செய்வது போன்றது. பாஜக கொண்டு வந்த எந்த மசோதாவையாவது அதிமுக எதிர்த்ததா? மேலும் 2,000 சதுர கி.மீ., இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால், ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுகிறார். ஆக்கிரமிப்பு இல்லை என் றால், சீனாவுடன் ஏன் 21 முறை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?
எம்ஜிஆர், மோடிக்குமான வேறுபாடு எல்லாருக்கும் தெரியும். எங்களது தேர்தல் அறிக்கை பேசும் பொருளாக மாறிவிட்டது. பாஜக தேர்தல் அறிக்கை 3 மணி நேரத்திலேயே புதைந்து விட்டது. அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அதில் எந்த புதிய அம்சமும் இல்லை. எங்களுக்கு தெரியாத, புரியாத தமிழ் கலாச் சாரத்தை மோடி கண்டறிந்ததற்கு மகிழ்ச்சி.
அவருக்குத் தெரிந்த தமிழ் கலாச்சாரத்தை ஒரு நாள் தமிழகத்தில் ஆங்கிலத்தில் உரை யாற்றுவாரா? எந்த கோயிலுக்குப் போக வேண்டும் என்பது நாட்டு மக்களுக்கே தெரியும். கோயி லுக்கு வழிகாட்டியாக பிரதமர் இருக்கத் தேவையில்லை. ஆளுநர் பதவியை திரும்பப் பெற வேண்டும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு, அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். அதிமுக வெற்றி பெறும் என்பது அதீத கற்பனை.
சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். அதைத் தடுத்தது பாஜக. ஆட்சி மாறினால் காட்சி மாறும். கருத்துக் கணிப்பை நான் பறைசாற்றுவது கிடையாது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனச் சொல்லியிருந்தால், அது சரியான கருத்துக்கணிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.