கீவ்: உக்ரைனின் செர்னிகிவ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்தச் சூழலில் ரஷ்யாவின் மூன்று ஏவுகணைகள் நேற்று (ஏப்.17) உக்ரைனின் செர்னிகிவ் நகரை தாக்கின.
இந்த ஏவுகணை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 61 பேர் காயமடைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “உக்ரைனுக்கு போதுமான வான் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைத்திருந்தால், ரஷ்ய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள உலக நாடுகளின் ஆதரவு போதுமானதாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக போரின் தொடக்கத்தில், ரஷ்யப் படைகள் செர்னிகிவ் நகரை சுற்றி வளைத்தன, இதனால் அப்பகுதி பெரும் அழிவை சந்தித்தது. இருப்பினும், ரஷ்ய மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், உக்ரைனின் வான்வழி பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டதால் மக்கள் அப்பகுதிக்கு மீண்டும் திரும்பினர்.