புதுச்சேரி: பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பணம் தருவதால் தேர்தலை ரத்து செய்து அவர்களை கைது செய்யக்கோரி புதுச்சேரியில் சுயேச்சை வேட்பாளர் சாலையில் தர்ணாவில் ஈடுபட்டார்.
புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் தருவதாக குற்றஞ்சாட்டி நேற்று (புதன்கிழமை) அதிமுகவினர் ஆட்சியர் அலுவலகம் சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஒதியம்பட்டு நான்கு முனை சந்திப்பில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ இன்று (வியாழக்கிழமை) பணப் பட்டுவாடாவை எதிர்த்து கறுப்புக் கொடியுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அவர் சாலையின் நடுவே அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்.
அப்போது அவர் கூறுகையில், “வாக்குக்கு பணம் தருவது சட்டப்படி குற்றம். பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ரூ. 500ம், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ரூ. 200ம் வாக்குக்கு அளிக்கிறார்கள். இதை கண்டித்து கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துகிறோம். வாக்குக்கு பணம் தருகிறவர்களை கைது செய்ய வேண்டும்.அவர்கள் பணம் தந்தால் எங்களால் எப்படி வெல்ல முடியும். பணம் தந்து பெறும் வெற்றி சரியானதல்ல. எனவே, தேர்தலையே ரத்து செய்ய வேண்டும். பணம் தந்தோரை கண்டிக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
அப்போது போலீஸார் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பணம் தருவோரை கைது செய்ய வேண்டும் என்று அவர் மீண்டும், மீண்டும் வலியுறுத்தினார். இறுதியில் சாலையில் இருந்து எழுந்து புறப்பட்டார். இந்த தர்ணாவால் சிறிது நேரம் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.