சமீபத்தில் லாரி ஒன்று பைக்கில் மோதி, அதை தீ பறக்க இழுத்துச் செல்வதும், லாரிக்கு வெளியே ஒருவர் தொங்கிக்கொண்டு லாரி டிரைவரிடம் சண்டையிடும் வீடியோ ஒன்று வைரலானது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவர் கடந்த 14-ம் தேதி ஆரம்கரிலிருந்து சம்பாபேட் லட்சுமி கார்டன்ஸ் நோக்கி தனது பைக்கில் சுமார் 11 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, சம்பாப்பேட்டை லட்சுமி கார்டன் அருகே அவருக்குப் பின்னால் வந்த லாரி ஒன்று அவர் பைக்மீது மோதியது.
இதில் சாலையின் ஓரத்தில் விழுந்த அப்துல் மஜீத், லாரி டிரைவரிடம் முறையிட முயன்றபோது, தப்பிக்க நினைத்த லாரி டிரைவர், தொடர்ந்து லாரியை இயக்கியிருக்கிறார். லாரியின் டயரில் சிக்கிய பைக், சுமார் 2 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்த லாரி சம்பாப்பேட்டில் மற்றொரு காரின்மீது மோதியதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பிருத்விராஜ் என்ற அந்த லாரி டிரைவரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. அதிவேகமாகச் சென்றதுதான் இந்த விபத்துக்குக் காரணம் என காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது. அப்துல் மஜீதிடமிருந்து புகார் பெறப்பட்டிருக்கிறது. விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும் என காவல்துறை தெரிவித்திருக்கிறது.